Dindigul srinivasan says admk will win in 214 constituency

Advertisment

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவர் திண்டுக்கல் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று (12.03.2021) வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மதியம் திண்டுக்கல் ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். நுழைவு வாயிலில் அவருடைய ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதை அடுத்து அவர் திண்டுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர் காசி செல்வியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆனால் அவர் சொத்து விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. வருகிற 15ஆம் தேதி சொத்து விவரத்தை சமர்பிப்பதாக தெரிவித்தார். அப்போது முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தமிழகத்தில் அதிமுக சிறப்பான ஆட்சியை வழங்கியது. கரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, விவசாயக் கடன், சுய உதவிக் குழுக் கடன் மற்றும் நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்தது. அதோடு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், குடும்பத் தலைவிக்கு தலா 1,500 ரூபாய் ஆகியவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இலவச திட்டங்களை அறிவிப்பதில் திமுக போன்று அதிமுக ஏமாற்றாது என்பது மக்களுக்குத் தெரியும்.

முதல்வர் இ.பி.எஸ். ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் மீண்டும் அதிமுகவையே தேர்வு செய்வர். 234 தொகுதிகளில், 214இல் அதிமுக வெற்றி பெறும். 20 தொகுதிகள் மட்டும் சிதறிப் போக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.