/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttv 450.jpg)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அந்த சின்னத்தையே தனக்கு வழங்கும்படி டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டார் டிடிவி தினகரன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குக்கர் சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே டி.டி.வி. தினகரன் கடந்த 15-ந்தேதி மதுரையில் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற புதிய அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பு தேர்தலில் போட்டியிடும்போது குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, மதுசூதனன் ஆகியோர் சார்பில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Supreme Court 600.jpg)
அந்த அப்பீல் மனுவில், “தினகரன் சுயேட்சை ஆவார். அவர் அரசியல் கட்சி கூட தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது அவருக்கு பொதுவான சின்னமாக குக்கர் சின்னத்தை வழங்கும்படி தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு எப்படி உத்தரவிட முடியும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நடந்து வந்தன.
இன்று (புதன்கிழமை) இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட்டது. தீர்ப்பில், “டி.டி.வி.தினகரன் அணிக்கு குக்கர் வழங்கும்படி தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டதை ஏற்க இயலாது. எனவே அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம்” என்று உத்தரவிட்டது.
சுப்ரீம்கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக டி.டி.வி.தினகரனும், அவரது ஆதரவாளர்களும் இனி குக்கர் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது டி.டி.வி.தினகரனுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Follow Us