நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன். மேலும் கட்சியை பதிவு செய்த பிறகே இனிமேல் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வருகிற 04.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி அளவில் வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. தினகரன் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, வட்டம், கிளைக் கழகங்களைச் சார்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. தினகரன் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெளியேறிய நிலையில் மாற்று கட்சியினர் அமமுகவில் இணைவது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.