Skip to main content

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் லட்சியத்துக்கு தினகரன் ஒரு சுமை! - நாஞ்சில் சம்பத் அதிரடி அட்டாக்! 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath

 

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல் என்றும், சசிகலா கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் அமமுகவினர் கலந்துகொள்ளக் கூடாது என தினகரன் தடை விதித்திருக்கிறார் என்றும் கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு அரசியலில் எதிரொலித்தபடி இருக்கிறது. இந்தச் சூழலில், இதுகுறித்து பேட்டியளித்த தினகரன், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலா ‘க்ளைம்’ (உரிமை) பண்ணிவருகிறார். அது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் இருக்கிறது. இந்த நிலையில், அமமுகவினர் கலந்துகொள்வது சட்டச் சிக்கலை உருவாக்கலாம் என்பதால் எங்கள் கட்சி நிர்வாகிகள் தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

இப்படி தினகரன் சொல்லியிருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் விருப்ப மனு வாங்குவதற்கான நிகழ்ச்சிகளில் சசிகலாவின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்திவருகின்றனர் அமமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள். தினகரன் சொல்வது உண்மையெனில், அவரது நிர்வாகிகள் சசிகலாவின் படத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதனால் சட்டச் சிக்கல்கள் உருவாகாதா? என்றெல்லாம் சர்ச்சைகள் எதிரொலிக்கச் செய்கின்றன.

 

இந்தச் சூழலில், அமமுகவின் முன்னாள் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “டி.டி.வி. தினகரன் திசை தெரியாமல் தடுமாறுகிறார்; தத்தளிக்கிறார். தமிழக அரசியலில் அவரை ஆதரித்து நான் பேசிய காலக்கட்டங்களில், அன்றைக்கு வெள்ளம்போல் வந்த இளைஞர்கள் கூட்டத்தில் இன்று ஒருவர் கூட தினகரனிடம் இல்லை. எல்லோரும் விலகிச் சென்றுவிட்டார்கள்.

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath
கோப்புப் படம்  

 

ஒரு நம்பகத்தன்மை இல்லாத மனிதன் டி.டி.வி. தினகரன். அவர் என்ன நினைக்கிறார்? என்ன கருதுகிறார்? எப்படி பயணிக்கப் போகிறார்? என்பதை அவர் வெளிப்படையாக எப்போதும் சொன்னதில்லை. ஆகவே, இப்படி உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக நாடகமாடும் டி.டி.வி. தினகரன், இன்றைக்கு சசிகலா அம்மையாரின் படத்தைப் போட்ட விருப்ப மனு படிவத்தை விநியோகித்திருக்கிறார் என்றால், சசிகலா இல்லாமல் அவருடைய தயவும் தாட்சண்யமும் இல்லாமல் ஒரு நிமிடம் கூட அவரால் இயங்க முடியாது என்பது தற்போது உண்மையாகியிருக்கிறது.

 

அதே நேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக சசிகலா அம்மையார் முன்வருகிறபோது, அந்த நிகழ்ச்சிக்கு அமமுக நிர்வாகிகள் போகக் கூடாது என தடுக்கிறார். ஆகவே, வெளிப்படையாக, மிக கேவலமாக ரெட்டை வேடம் போடுகின்ற தினகரனை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை. 

 

சசிகலாவின் படத்தை அச்சிடாமல் விருப்ப மனு படிவத்தைக் கொடுத்திருந்தால் விருப்ப மனுவைக் கூட ஒருத்தரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள். அமமுகவின் இன்றைய நிலைமை இதுதான் என்றால், நாளைக்கு அதிமுகவுக்கும் அந்த நிலைமைதான் வரும்.  அதனால், சசிகலா என்பவர் தவிர்க்க முடியாதவராக மிக சாதுர்யத்துடனும் சாணக்கியத்தனத்துடனும் அரசியல் செய்கிறார்.

 

அவர் இதுவரைக்கும் டி.டி.வி. தினகரனின் பெயரையோ, அமமுக பெயரையோ உச்சரிக்கவில்லை. நடந்து முடிந்த பொதுத்தேர்தலானாலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலானாலும் அமமுகவிற்கு ஆதரவு தாருங்கள் என ஒரு இடத்தில் கூட சசிகலா கேட்கவில்லை. ஆகவே, அதிமுகவுக்குத் தலைமை தாங்கக் கூடிய லட்சியத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிற சசிகலா அம்மையாருக்கு, டி.டி.வி. தினகரன் ஒரு சுமையாக இருக்கிறார்; ஒரு தடையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. 

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath

 

ஆகவே, நிர்தாட்சியமாக, டி.டி.வி. தினகரனை நிராகரித்துவிட்டுப் பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா, தினகரனை அலட்சியப்படுத்துவது மட்டுமல்ல; அரசியலில் இருந்து தினகரனை அப்புறப்படுத்தவும் முன்வர வேண்டும். அப்போதுதான் சசிகலாவின் பயணம், அவரது இலக்கை எட்டுவதற்கு துணை நிற்கும்” என்றார் மிக அதிரடியாக.

 

தொடர்ந்து நம்மிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலாவின் உரிமை கோரும் முயற்சிக்கு சட்டச் சிக்கல் வந்துவிடக் கூடாது என தினகரன் சொல்வது, அரசியலில் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் தருகிற மரண வாக்குமூலம் அது. சசிகலா இவரை எப்போதும் சேர்த்துக்கொள்ள மாட்டார். அவரை தனது லட்சியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் கருத மாட்டார். அவருடைய பயணத்தில் ஒரு இடத்துக்கும் இனி அழைக்க மாட்டார். ஆகவே, டி.டி.வி. தினகரன் ஒரு அரசியல் அனாதை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியும்” என்று அணுகுண்டு போல வெடித்தார் நாஞ்சில் சம்பத்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை” - சசிகலா பேச்சு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Tamil police are not working properly" - Sasikala speech

தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை எனச் சசிகலா பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தற்போது அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். தமிழக போலீசார் சரியாக செயல்படவில்லை.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்திய போது அவர் ஒரு பெண் முதல்வர் என்பதால் அரசியல் கட்சியினர் பலரும் அவரை விமர்சனம் செய்தனர். தற்போது ஜெயலலிதா புகைப்படம் பலருக்கும் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு?' - சசிகலாவுக்கு எடப்பாடி கேள்வி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 'Who has saved the party for so many days?'- Sasikala asked the question

இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்ட போது காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிக காப்பீடு இழப்பீடு பெற்றுத் தந்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரி குளங்களை தூர்வாரச் செய்து மழைக்காலத்தில் நீர் சேகரித்து வைக்கப்பட்டது. கோடைகாலத்தில் விவசாயிகள் நிலத்திற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தினார்கள். குடிநீர் பஞ்சமும் இல்லாமல் இருந்தது.

அதோடு மேட்டூரில் இருந்து திறக்கப்படுகின்ற நீர் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிகளுக்கும் தங்குதடை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டது. இப்படி பல திட்டங்களை விவசாயிகளுக்காக அதிமுக அரசு செய்தது. ஆனால் இப்பொழுது திமுக அரசு குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தரவில்லை. 78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்ததாகவும் செய்தி ஊடகத்தில் வந்திருக்கிறது. இன்னும் சில பேர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வருகிறது. கிட்டத்தட்ட 40 பேர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத்திலும் பலமுறை சொல்லியிருக்கிறேன் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்; கள்ளச்சாராயத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று, ஆனால் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அப்பாவி மக்கள், ஏழை மக்கள் கள்ளச்சாராயம் அருந்தி விலை மதிக்க முடியாத உயிரை இழந்து இருக்கிறார்கள்'' என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா  ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-ல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.