Skip to main content

நீங்க ராஜினாமா பண்ணிட்டீங்களா? எடப்பாடியிடம் எகிறிய விஜயபாஸ்கர்!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
edappadi palanisamy


அமைச்சர், டி.ஜி.பி. வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர்களது பதவியை முதல்வர் எடப்பாடி பறிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அரசியல்ரீதியாக வலுத்து வருகின்றன. 
 

மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்களோடு முதல்வர் கலந்தாலோசித்தபோது, ""ரெய்டுக்கு ஆளானவர்கள் பதவி விலகுவதுதான் சரியானது. இல்லைன்னா அரசு மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும். எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தமாக பதில் சொல்ல முடியாத நெருக்கடியும் ஏற்படும்'' என தெரிவித்திருக்கிறார்கள். 
 

இதனை மையமாக வைத்து, ராஜினாமா செய்யச்சொல்லி விஜயபாஸ்கரிடம் வலியுறுத்த அவரை தனது வீட்டுக்கு வருமாறு 5-ந்தேதி மாலை அழைத்திருக்கிறார் எடப்பாடி.
 

அதனை ஏற்க மறுத்து தொலைபேசியிலேயே எடப்பாடியிடம் பேசிய விஜயபாஸ்கர், ""நீங்க என்ன சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, ராஜினாமா செய்யமாட்டேன். ரெய்டு நடந்துட்டாலே நான் குற்றவாளியா? உங்க மகன் வீட்டிலும் சம்பந்தி வீட்டிலும் ரெய்டு நடந்துச்சு. நீங்க ராஜினாமா பண்ணிட்டீங்களா?
 

ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக வழக்கு இருக்கு. அவர் ராஜினாமா பண்ணிட்டாரா? என்னை மட்டும் ஏன் வற்புறுத்த நினைக்கிறீங்க?'' என காட்டமாகச் சொல்லியிருக்கிறார். இதனால் போனை துண்டித்துக்கொண்டார் எடப்பாடி. நமக்கு எதிரான பிரச்சனையை நாமே எதிர்கொள்ள வேண்டுமென திட்டமிட்டு, "குற்றச்சாட்டு கூறப்பட்டாலே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்'’ என விளக்கமளித்தார் விஜயபாஸ்கர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார்.