Advertisment

அதிமுக அரசின் கெட்ட நோக்கம்... மு.க.ஸ்டாலின் கண்டனம்

 mk stalin

Advertisment

கரோனா நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த விடாமல், கெட்ட நோக்கத்துடன் தடுக்கிறது அ.தி.மு.க. அரசு என கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நிதிப் பயன்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், அந்த நிதியைப் பயன்படுத்துவதற்குரிய வழி காட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடாமல் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான 3 கோடி ரூபாயில் – சட்டமன்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி, கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 1 கோடி ரூபாயை அரசு நேரடியாக எடுத்துக் கொள்ளும் என்று தன்னிச்சையாக முதலமைச்சர் அறிவித்தார். அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட 234 கோடி ரூபாய் மாநில அளவில் செலவிடப்படும் என்றார். இதுதவிர - கொரோனா பணிகளுக்காக 25 லட்சம் ரூபாய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒதுக்கீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு - அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் - மீதியுள்ள 1.75 கோடி ரூபாய் நிதியை, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நெருக்கடியை அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை அடையாளம் கண்டு - அவற்றை நிறைவேற்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம். ஆனால் அதுதொடர்பான 'வழிகாட்டு நெறிமுறைகளை' ஒவ்வோர் ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பரிந்துரையின் பேரில் வெளியிட வேண்டும். 2020-21-ஆம் நிதியாண்டு ஜூலை மாதம் வரை கடந்து விட்ட நிலையில் - இதுவரை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவில்லை. அதனால், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கிய நிதியை ஆங்காங்கே மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாநகராட்சி ஆணையர்களும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். புதிதாகத் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அது தடையாக இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றின் பரவல் தீவிரமாக கிராமங்களைத் தொட்டுள்ள நேரத்திலும், சென்னையில் உச்சத்தில் இருக்கும் நேரத்திலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைப் பயன்படுத்த முடியாத ஒரு சூழலை அ.தி.மு.க. அரசு வேண்டுமென்றே உருவாக்கியிருப்பது வேதனைக்குரியது.

தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியை தப்பித் தவறி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி - மக்கள் மத்தியில் நற்பெயர் சம்பாதித்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்குடன் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு இதுவரை வெளியிடாமல் இருக்கிறதா என்ற அடிப்படையான கேள்வி எழுகிறது.

ஆகவே, சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின்கீழ் அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 2020-2021-ஆம் ஆண்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு என வழங்கப்படும் இந்த நிதி - கிராமங்கள் மற்றும் நகரங்கள் என்று வேறுபாடு பாராமல், உள்கட்டமைப்புப் பணிகளுக்குப் பெரிதும் பயன்படுவதால் - கொரோனா பேரிடர் காலத்தில் தொகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிட இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tamilnadu admk funds MLA mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe