Skip to main content

பள்ளிக் கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன்? கே.பாலகிருஷ்ணன்

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
K.Balakrishnan

 

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் தடுமாற்றங்கள் பல லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. தமிழக மாணவர்களின் நலனை கணக்கில் கொண்டு நிதானமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் 11ம் வகுப்பிற்கான பாடத்திட்ட மாறுதலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீப காலங்களில் முன்னுக்குப் பின்னான பல முரண்பட்ட திட்டங்களை அறிவிப்பதும், பின்னர் மக்களின் வற்புறுத்தல் காரணமாக அதை வாபஸ் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த வகையில் தற்போது நடப்பாண்டிற்கான (2020-21) 11ம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்திய நாட்டில் பல சாதனைகளை சாதித்துள்ளது. இந்திய நாடு முழுவதும் 10, +2 வகுப்பு முறை 1967-68ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டுமென இந்திய அரசு வற்புறுத்தியபோதும், தமிழக சூழ்நிலையை கணக்கில் கொண்டு அதை 1977-78ல் தான் அமல்படுத்த முன்வந்தது.  மேலும், +2 முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் அதிக வாய்ப்புகள் அளிக்கும் வகையில் 11ம் வகுப்பில் மூன்றாவது பிரிவில் நான்கு பாடங்களை கொண்ட திட்டங்களை செயல்படுத்தி வந்தது. இத்தகைய காரணங்களால் அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இரட்டிப்பு விகிதத்தை தமிழகம் அடைந்துள்ளது.

இச்சூழ்நிலையில் தற்போது 11ம் வகுப்பிற்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, முதல்பிரிவு தமிழ், இரண்டாம் பிரிவு ஆங்கிலம், மூன்றாம் பிரிவுக்கு நான்கு பாடங்களைக் கொண்ட பல்வேறு குரூப்புகளுடன் மொத்தமாக 600 மதிப்பெண்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தால் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கோ அல்லது அதில் சேர வாய்ப்பில்லாத போது பொறியியல் படிப்புக்கோ அதிலும் சேர வாய்ப்பில்லாத போது இதர கலை மற்றும் அறிவியல் துறைகளில் சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால், தற்போது தமிழக அரசு மூன்றாம் பிரிவுக்கு மூன்று பாடங்களுடன் மொத்தமாக 500 மதிப்பெண்கள் என தீர்மானித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தம், உயர்கல்வி, வேலைவாய்ப்புகளை கணக்கில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு பாடங்கள் மூன்றாக சுருங்கும்போது இம்மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும் சுருங்கும் நிலை ஏற்படுகிறது.

மத்திய அரசின் கட்டாய நீட் தேர்வால் தமிழக மாணவர்களது மருத்துவ படிப்பு வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாடத் திட்ட மாற்றத்தால் பொறியியல் படிப்பிற்கான வாய்ப்புகளும் பறிக்கப்படுகிறது.

மேலும் நடப்பாண்டில் (2020-21) நான்கு பாட முறைகளை கொண்ட 600 மதிப்பெண்கள் கொண்ட திட்டமும், மூன்று பாடங்களை கொண்ட 500 மதிப்பெண்கள் கொண்ட திட்டமும் நடைமுறையில் இருக்கும் என்பதுதான் உச்சக்கட்ட குழப்பமாகும். அதாவது, ஒரே வகுப்பில் நான்கு பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கும், மூன்று பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வியில் ஒரே மாதிரியான வாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிவித்து நாடு முழுவதும் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளது. ஆனால், தமிழக அரசு இறுதி செய்யப்படாத மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏதுவாக 11ம் வகுப்பின் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

ஏற்கனவே, தமிழக அரசு 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்து மக்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக பின்னர் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின்னர் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்தது. பின்னர், இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தினாலும் மேல்படிப்புக்கு 12ம் வகுப்புக்கான தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாக கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியானால் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

கரோனா உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டது. அரசியல் கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் வற்புறுத்தலோடு உயர்நீதிமன்ற தலையீட்டின் காரணமாக 10ம் வகுப்பு கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்கள் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவதிலும் பள்ளிக் கல்வித்துறை குழப்பமான அணுகுமுறையே கடைபிடித்து வருகிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மேற்கண்ட தடுமாற்றங்கள் பல லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை இத்தகைய தடுமாற்றங்களை கைவிட்டு, தமிழக மாணவர்களின் நலனை கணக்கில் கொண்டு நிதானமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது கரோனா நோய்த் தொற்று மிகவும் உச்சத்தை அடைந்து, தமிழக மக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொதுமுடக்கம், ஊரடங்கு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவசர கதியில் 11ம் வகுப்பிற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிற பாடத்திட்ட மாற்றங்களை தமிழக அரசு நிறைவேற்றக்கூடாது எனவும், இப்போதைக்கு அத்திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமெனவும், பின்னர் சுமூகமான சூழ்நிலையில் இத்தகைய மாற்றங்கள் குறித்து தமிழக சட்டமன்றத்திலும், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிம் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.