/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/65_39.jpg)
சட்ட சபையில் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் பின் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகரின் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க மறுத்ததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டது. சென்னையில் வள்ளுவர்கோட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடந்ததாக கூறி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷங்களை எழுப்பி கருப்பு சட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி“சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரிடம் அனைத்து ஆதாரங்களையும்முழுமையாக கொடுத்துள்ளோம். ஓபிஎஸ், வை.ஜெயந்தன், மனோஜ் ஆகியோர் நீக்கப்பட்டதற்கும் ஆதாரம் கொடுத்துள்ளோம். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு,அவர் நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. தீர்மானம் செல்லும் எனும் பொழுது அவர் நீக்கப்பட்டதும் செல்லும். இதுதான் ஜனநாயகப் படுகொலை. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எதிர்க்கட்சியை ஒடுக்கும் நிலையில்தான் முதல்வர் செயல்பட்டுக்கொண்டு உள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை பிளக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்று எண்ணுகிறார் முதலமைச்சர். அவர் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக சொல்லுகிறார்கள். உண்மைக்கு மாறான பொய். சட்டப்பேரவைத் தலைவர் உண்மையை மறைத்து பேசுகிறார்” என கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)