Advertisment

அதிமுக அரசு இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்... கே.பாலகிருஷ்ணன்

K. Balakrishnan

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழ்நாடு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. செயற்குழுக் கூட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,

Advertisment

"நவம்பர்-26 ஆம் தேதி முதல் "டெல்லிக்கு செல்வோம்"(டெல்லி சலோ) என்ற முழக்கத்தினை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மகாராஷ்ட்ரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.

Advertisment

மத்திய பாஜக அரசு அனைத்து திசைகளிலிருந்தும் வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளது. இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயிலில் அதே இடத்தில் தங்கியிருந்து வெட்ட வெளியில் உண்டு, கழித்து, உறங்கி எட்டு நாட்களாக மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்திருத்த மசோதா 2020ஐயும் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்ப மாட்டோம் எனப் போராடி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. மோடி தலைமையிலான அரசைக் கண்டிக்கும் வகையிலும் போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையிலும் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து இந்திய விவசாயிகளை கார்பரேட் அடிமைகளாக மாற்றும் 3 வேளாண் விரோத சட்டங்களையும், வேளாண்மைத் தொழிலுக்கு உயிர் நாடியாக இருக்கும் மின்சாரத்தை வணிகப் பண்டமாக்குகிற மின் மசோதா2020 ஐயும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்தச் சட்டங்களால் தமது வாழ்வாதரம் முற்றாக அழிந்து விடும் என்பதை உணர்ந்த விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. வாட்டுகிற கடுங்குளிரில் வெட்ட வெளியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசுஇழுத்தடித்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடியின் அரசு அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களின் கொள்ளைலாபத்திற்காக மட்டுமே செயல்படுவதால் இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகளை டிசம்பர் 5/2020 அன்று இந்தியா முழுவதும் எரித்து, எதிர்ப்பு தெரிவிப்பதென AIKSCC அகில இந்திய செயற்குழு அறிவித்துள்ளது.

AIKSCCயின் தலைமைக்குழு முடிவிற்கிணங்க தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோர் உருவபொம்மைகள் எரிப்புப் போராட்டம் நடத்துவது. டிசம்பர் 9/2020 முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்புப் போராட்டம்.

வாட்டும் குளிரில் வதைபட்டு வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி பாஜக தலைமையிலான இந்திய அரசு தீர்வு காண வேண்டும். இந்திய விவசாயிகளை கார்பரேட் முதலாளிகளுக்கு அடிமைப்படுத்தும் 3 வேளாண் விரோத சட்டங்கள் நிறைவேற மாநிலங்களவையில் துணை செய்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வேளாண் விரோத சட்டங்களை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர்-9 /2020 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொடர்காத்திருப்புப் போராட்டம் தொடங்குவது.

விவசாயிகளின் நியாயமான இந்தப் போராட்டங்களுக்கு அனைத்து சிவில், சமூக, அரசியல் இயக்கங்களும் மற்றும் மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் முழுஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Delhi Farmers Protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe