/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_53.jpg)
ஜெயலலிதாவால் போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று விரட்டிஅடிக்கப்பட்ட தினகரன் எடப்பாடியை பார்த்து விமர்சிக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் எனசிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்டச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான சிவி.சண்முகம் நேற்று செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, “தமிழக ஆளுநரிடம் உரிய ஆதாரங்களுடன் திமுக ஆட்சி குறித்து புகார் அளித்துள்ளோம். ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் புகார் அளித்துள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.நாங்கள் உரிய ஆதாரங்களுடன்தான் புகார் அளித்துள்ளோம். திமுக தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு சொத்து சேர்ப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். முதல்வருக்கு ஆட்சியில் நடப்பது, கட்சியில் நடப்பது குறித்து கூட எதுவும் தெரியவில்லை. கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்துக்களைத்தெரிவித்து வருகிறார்கள்.
அரசு கேபிள் டிவி கடந்த 10 நாட்களாக முடக்கப்பட்டுக் கிடக்கிறது.இதைப் பயன்படுத்திக் கொண்டு இரண்டு தனியார் டிவி சேனல்கள் இனிமேல் அரசு கேபிள் டிவி தெரியாது எங்கள் சேனல்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று விற்பனை செய்து வருகிறார்கள். இப்படி அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.
டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி உடன் இருப்பவர்கள் அனாதையாகத்தான் போவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா தினகரனை போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று விரட்டி அடித்தார். அப்படிப்பட்ட தினகரன் எடப்பாடியை பார்த்து விமர்சிக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர். அவர் உட்பட கடந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அவரை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் தான் தற்போது நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்காண்டு காலம் அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அதன் பயனாகத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதலைமையில் தேர்தலை சந்தித்து 75 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஒரு பெரும் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத தினகரன் அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத நபர். ஆளுநரை நாங்கள் சந்தித்தபோது தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)