Skip to main content

“அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்..” - சி.வி.சண்முகம் 

Published on 01/03/2022 | Edited on 01/03/2022

 

CV Shanmugam speech at viluppuram district

 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் நேற்று கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி விழுப்புரத்தில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

இதில் சி.வி.சண்முகம் பேசியதாவது; “முதல்வர் ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பணிகள் ஏராளம் உள்ளன. அவர் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது பற்றி சிந்திக்காமல் அதிமுகவை அழித்துவிடலாம் என மனக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகத்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கும் வேலையை செய்து வருகிறார். 

 

இதன் மூலம் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை வழிநடத்த யாரும் இருக்க மாட்டார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு செயல்படுகிறார். அந்த அடிப்படையில் தான் தற்போதைய திமுக அரசு செய்யும் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. சிறை என்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல எங்களுக்கும் மீண்டும் ஒரு காலம் வரும்; தமிழகத்தை அதிமுக ஆளும். அப்போது நீங்கள் இப்போது செய்ததற்கான எதிர்வினையை சந்தித்தே ஆகவேண்டும். 

 

திமுகவில் 13 அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நாங்கள் நினைத்திருந்தால் பழிவாங்க வேண்டும் என்ற விரோதமான மனப்பான்மை இருந்திருந்தால் திமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்களை கைது செய்திருக்க முடியும். நாங்கள் நாணயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். நீங்கள் வழக்குகளைத் திரித்து பொய்வழக்குப் போடுகிறீர்கள். அதைக் கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. நாங்கள் எங்கும் ஓடி விடமாட்டோம்; எதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதிமுக எப்போதெல்லாம் தோல்வியை சந்திக்கின்றதோ அதன் பிறகு மிகப்பெரிய வெற்றியை பெறும் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்” இவ்வாறு சி.வி. சண்முகம் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்