
அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் போடப்பட்ட மனுக்களையும், கட்சியின் உள்கட்சி பிரச்சனையை தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மனுவையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமியின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், ‘சின்னம் தொடர்பானவற்றைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்’ என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில், இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதத்தை கடந்த ஜனவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் அளித்திருந்தனர். அதன்படி, இரட்டை இலை சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இறுதி விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதிமுக மீது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், கட்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் அதிமுகவினுடைய உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணயத்தில் பல்வேறு மனுக்களை கொடுத்திருக்கின்றனர். அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் இன்றைக்கு விசாரணை வைத்திருந்தது. அந்த விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடைய கருத்தாக அதிமுகவின் கருத்தை தேர்தல் ஆணயத்தில் எங்களுடைய வழக்கறிஞர் மூலமாக தெரிவித்திருக்கிறோம்.
கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் கொடுத்திருக்கும் மனுக்கள் அனைத்தும் ஆரம்ப கட்டத்தில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அது விசாரணைக்கு உகந்தவை அல்ல என்றும் தெரிவித்திருக்கிறோம். குறிப்பாக இந்த மனுக்களை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. தேர்தல் ஆணயத்திற்கு ஒரு கட்சியில் உள் விவகாரங்களிலோ, அந்த கட்சியினுடைய ஏற்படுகிற பிரச்சினைகளை தலையிடுவதற்கு எந்த விதியின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்பதை தெளிவாக அந்த உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கட்சியினுடைய விதிகளில் மாற்றங்களோ திருத்தங்களோ ஏற்பட்டால் அதை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது.
இப்போது மீண்டும் இந்த வழக்கிலே சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு தெளிவாக சொல்லி இருக்கிறது. உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவதற்கு தேர்தல் ஆணியத்திற்கு அதிகாரம் இல்லை. ஆகவே, இன்றைக்கு நடந்த தேர்தல் ஆணயத்தின் நடைபெற்ற விசாரணையில், நீக்கப்பட்டவர்கள் வெளியேறியவர்கள் வெளியேற்றப்பட்டவர்கள் தொடர்பில்லாதவர்கள் கொடுத்திருக்கிற அனைத்து மனுக்களுமே இந்த கட்சியினுடைய உள்கட்சி விவகாரம். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வழக்கில் தேர்தல் ஆணையம் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை. உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. ஆகவே இந்த மனுக்கள் அனைத்தும் ஆரம்ப கட்டகத்தில் தள்ளுபடி செய்ய வேண்டும். இது விசாரணைக்கு உகந்தது அல்ல என்று எங்களுடைய வாதத்தை வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.