Skip to main content

கடலூர்: சாயக்கழிவு ஆலை பணிகளைக் கைவிட வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
seeman



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


“காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஓர் அங்கமான கடலூர் மாவட்டத்தின் புவனகிரி வட்டம், பெரியப்பட்டு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் நாசகார SIMA (South Indian Mills Association) சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை முழு வீச்சில் அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வேதிதொழிற்சாலைகளால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் எஞ்சியுள்ள மக்கள் வாழ்கின்ற வாழ்வாதார வளமான பகுதிகளைப் பாலைவனமாக்கக் கூடிய இந்தத் திட்டத்தைப் புவனகிரியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட உள்ளூர் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய, மாநில அரசுகள் செயற்படுத்தத் துடிப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் 304 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசு அனுமதியுடன் அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் வேறாக இருப்பதாகத் தெரியவருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் செயல்பட்ட சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத கழிவுகள் பல ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை முற்றாக நாசப்படுத்தி, விவசாயத்தை முற்றிலுமாக அழித்து, குடிநீர் ஆதாரத்தை முழுவதுமாகக் கெடுத்ததையடுத்து மக்களின் எதிர்ப்பாலும், நீதிமன்ற உத்தரவாலும் பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது அந்த மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள ஆலைகளின் சாயக் கழிவுகளை அங்கே கொட்ட இயலாத சூழ்நிலை காரணமாக இங்கு கொண்டு வந்து சுத்திகரிப்புச் செய்கிறேன் என்கிற பெயரில் தண்ணீரைக் கலந்து கடலில் விடுவது தான் இத்திட்டத்தின் உள்நோக்கம் என்பது தெள்ளத்தெளிவு.

 

 


இதன் உண்மையான பின்னணியைத் தெரிந்து கொண்டதால்தான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்குப் பணிந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை, ஆலையை நிறுவும் அமைப்பான சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இப்போது கரோனா பரவல் அச்சம் காரணமாக மக்கள் வெளிவர முடியாத சூழலை பயன்படுத்திக் கொண்டு பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆலை அமைக்கப்படும் சுற்றுவட்டார பகுதியில் ஆலைக்காக நீர் எடுத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராடிய காரணத்தைப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் அண்மையில் ஒதுக்கிய முறையே ரூ.40 கோடி மற்றும் ரூ.14 கோடி நிதியைக் கொண்டு கடலூர் அருகிலுள்ள செம்மங்குப்பத்தில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணற்றின் மூலமாக தினமும் பல கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து வருவதற்காக இராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.

சிப்காட் பகுதியிலுள்ள நிலத்தடி நீரில் ஏற்கனவே இரசாயனங்கள் கலந்ததால் 120 மடங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அப்பகுதி மக்கள் தங்களுடைய எந்தப் பயன்பாட்டிற்கும் அத்தண்ணீரை பயன்படுத்துவதில்லை, அவ்வாறு இருக்கையில் எதற்கும் உபயோகம் இல்லாத தண்ணீரைக் குடிநீருக்காக பெரியப்பட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்வதாகக் கூறி குழாய் பதிக்க முற்படுவது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுதவிர பெரியப்பட்டு பகுதியில் 1200 அடி ஆழத்திற்கு ஒரு மீட்டர் விட்டம் கொண்ட 11 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அவற்றின் மூலம் பூமியிலிருந்து தினமும் ஒன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கும் சைமா தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த அளவு நிலத்தடி நீரை அப்பகுதியில் எடுத்தால் அருகில் இருக்கும் பெருமாள் ஏரி வறண்டு போவதோடு அதை நம்பியுள்ள விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

எனவே பெரியபட்டு பகுதியில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் பெயரளவில் ஜவுளி தொழிற்சாலையை அமைத்து விட்டு, அந்தப் பூங்காவுக்காக உறிஞ்சப்படும் ஒரு கோடி லிட்டர் நிலத்தடி நீரினை பயன்படுத்திச் சாயக்கழிவுகளைத் தூய்மைப் படுத்தும் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளைக் கடலூருக்குச் சாலைவழியாகக் கொண்டுவந்து சுத்திகரிப்பது என்பதே சைமா நிறுவனத்தின் மிகப்பெரிய பேரழிவு திட்டமாகும். கோவை , திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல கோடி லிட்டர் சாயக்கழிவுகள் வெளியாகும் நிலையில் அவை முழுவதையும் இங்கு சுத்திகரிக்க முடியாது அதனால், முடிந்தவரை சுத்திகரிப்புச் செய்கிறோம் என்கிற பெயரில் மீதமுள்ள கழிவுகளைத் தண்ணீருடன் கலந்து கடலில் கலக்கச் செய்வதே பேரழிவின் துணைத் திட்டமாகும். இதற்கு வசதியாகச் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நிலப்பரப்பில் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கும், கடலுக்குள் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கும் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன.

 

nakkheeran app




எனவே இந்த ஆலை இரு வழிகளில் கடலூர் மாவட்ட மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாகப் பூமியிலிருந்து தினமும் குறைந்தபட்சம் ஒன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாலும், அதனால் ஏற்படும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு கடல் நீர் ஊருக்குள் நுழைவதாலும் சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு, வாண்டியாம்பாளையம், காயல்பட்டு, ஆண்டார் முள்ளிப்பள்ளம், திருச்சோபுரம், தியாகவல்லி, கீழ்பூவானிக்குப்பம், ஆதி நாராயணப் புரம், சிறுபாலையூர் ஆகிய பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் விவசாயம் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவதோடு , நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து அந்தப் பகுதியே பாலைவனமாகி மக்கள் குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்படும். அடுத்ததாக அதேபோல், கடலில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் விடப்படுவதால் மீன் வளம் அழிந்து, அதை நம்பியுள்ள புதுப்பேட்டை, புதுகுப்பம், வேலிங்கராயன் பேட்டை சாமியார்பேட்டை, குமராப்பேட்டை, மடவாப்பள்ளம், அன்னப்பன்பேட்டை, ரெட்டியார்பேட்டை, அய்யம்பேட்டை, பேட்டோடை, பெரியகுப்பம், நஞ்சலிஙகம் பேட்டை, தம்னாம்பேட்டை, சித்திரை பேட்டை,, ராசாப்பேட்டை ஆகிய பதினைந்திற்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் வாழும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

ஒரு பக்கம் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள இராசயன ஆலைகளால் அப்பகுதி நச்சுப் பூமியாக மாறி வரும் நிலையில், மற்றொரு பக்கம் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூலமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றி கடல்நீர் உட்புகுந்து குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலையில் கடலூர் மாவட்ட மக்களுக்குப் பேரழிவை கொடுக்கப்போகும் இத்திட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும். எனவே இந்த விடயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுச் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை நீக்கம் செய்ய வேண்டும்; மக்களின் எதிர்ப்புகளை மீறி நடத்தப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கும் ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மிகப்பெரிய மக்கள் திரள் எதிர்ப்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.