Skip to main content

எடியூரப்பா மகன் பதவியேற்பு; சி.டி. ரவியின் முடிவால் பா.ஜ.க.வில் பரபரப்பு! 

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

CT Ravi Skip Vijayendra's oath-taking ceremony

 

கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவி ஏற்பு விழாவிற்கு சி.டி. ரவி பங்கேற்கப் போவதில்லை எனும் தகவல் வெளியாகி கர்நாடகா பா.ஜ.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநில பாஜக தலைவராக அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயேந்திராவை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு பாஜக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கர்நாடகா பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வரும் 15ம் தேதி பதவி ஏற்கிறார். இந்தப் பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. தலைவர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். 

 

CT Ravi Skip Vijayendra's oath-taking ceremony

 

இந்நிலையில், அந்தப் பதவி ஏற்பு விழாவிற்கு கர்நாடகா பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.டி. ரவி பங்கேற்கவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா பா.ஜ.க. தலைவர் ரேஸில் சி.டி.ரவி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், எடியூரப்பாவின் மகனான விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இதற்கு உட்கட்சியிலேயே சிலருக்கு அதிருப்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் சி.டி.ரவி, கர்நாடகா பா.ஜ.க. தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனும் தகவல் அந்த மாநில பா.ஜ.க. அரசியலில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. ஆனால், அவர் மத்தியப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கு செல்வதாகவும் அதன் காரணமாகவே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. மற்றபடி எந்தக் காரணமும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

 

பா.ஜ.க.வின் அனைத்து தலைவர்களும், தி.மு.க., காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலின் பிடியில் சிக்கியிருக்கிறது எனத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லுமிடத்திலும் வாரிசு அரசியல் குறித்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் முன்னாள் முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவின் மகன் அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பலராலும் வாரிசு அரசியல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூர் வெடிகுண்டு விவகாரம்; சித்தராமையா தகவல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
 Siddaramaiah information about Bangalore Bomb Affair

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதியில் சென்றாரோ அந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? எனத் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பா.ஜ.க இதை அரசியலாக்கக் கூடாது” என்று கூறினார். 

Next Story

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பியுமான கெளதம் கம்பீர் அதிரடி அறிவிப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Former cricketer and BJP MP Gautam Gambhir action announcement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் இன்று (02-03-24) திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, கவுதம் கம்பீர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் நான் கவனம் செலுத்துவதற்காக எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.