Criminals have no fear in the Dravidian Stalin regime! - EPS allegation.

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள அவர், "தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஜெயராமன் எனும் விவசாயி தீக்குளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை. பச்சைத் துண்டுடுத்தும் விவசாயியை, தன் உயிரை விடத் துணிய வைத்த ஸ்டாலின் அரசு, தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.

Advertisment

மேலும், ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞன் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ததாக செய்திகள் வருகின்றன.80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?

குற்றவாளிகளுக்கு பயமில்லை; அரசு இயந்திரத்தின் மீது கடிவாளம் இல்லை- மொத்தத்தில் இந்த ஸ்டாலின் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தது தவறு தான் என்று தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் வருத்தமே படுகிறார்கள். விவசாயி ஜெயராமன் உயிரைக் காக்க வேண்டும்; அவருக்கு நிவாரணம் வழங்கி, அவரின் குறையைத் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், ராணிப்பேட்டை மூதாட்டியை பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.