ADVERTISEMENT

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

04:25 PM Apr 10, 2024 | ArunPrakash

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

ADVERTISEMENT

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது. சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும். தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா? மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு வளர்ச்சி இல்லை. மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது. மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல, தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல். இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT