cpi mutharasan talk about pm modi

Advertisment

பிரதமரின்மோடியின் உதடு தமிழைப் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் உள்ளம் சமஸ்கிருதத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறது எனஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக,அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமைப்புகளை பா.ஜ.க. அரசு தங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது. தற்போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்றமே பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது. ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினோம். அது தற்போது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால், மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது.

இந்தி, சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம்தொடக்க விழாவில் தமிழைக் குறித்து புகழ்ந்து பேசிய மோடி தமிழ்மொழிக்கு எதுவும் செய்யவில்லை. மோடி அரசு பொறுப்பேற்று ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழுக்கு மிக மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது.

Advertisment

மோடியின் உதடு தமிழைப் புகழ்ந்து பேசுகிறது. ஆனால், உள்ளம் சமஸ்கிருதத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறது. மொழிகளை மட்டுமல்ல, அவர் மாநிலங்களையும் சமமாக நடத்தவில்லை. நடைமுறையில் அவர் குஜராத்துக்கு மட்டுமே பிரதமராக உள்ளார். மொழி விவகாரத்தில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக இருக்கிறார். 122 ஆண்டுகளில் பெய்யாத மழை மயிலாடுதுறை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மோடி அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால், குஜராத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மக்களுக்கு உதவுகிறார். மோடி தொடர்ந்து பொய்யை மட்டுமே பேசி வருகிறார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் கூறினார். ஆனால், தற்போது 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் அவ்வாறு செயல்படுகிறார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல பிரச்சனைகள் உருவாகக் காரணமாகி வருகிறார். இந்தியா மதச்சார்பின்மை நாடு. ஆனால், ஆளுநர் இந்தியாவை இந்துக்களின் நாடு என்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதற்கு அவரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இந்து, சனாதனம் போன்றவற்றை பேசி வந்த அவர் தற்போது மார்க்ஸ் குறித்து பேசுகிறார். மார்க்ஸ் தத்துவத்தால் எந்த நாடும் சீரழியவில்லை. அந்தத்தத்துவத்தால் மாற்றங்கள் தான் நடந்துள்ளது. ஆனால், ஆளுநர் ரவி மார்க்ஸால் தான் நாடு சீரழிந்தது எனப் பேசத்தொடங்கியுள்ளார்.

மனுநீதியை உயர்த்திப் பிடிப்பது ஆர்.என்.ரவியின் கொள்கையாக இருக்கட்டும். அவர் ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பரப்பட்டும். மனுதர்மம் குறித்து வெளிப்படையாகப் பேச மறுக்கிறார். தங்கள் கொள்கையைப் பகிரங்கமாக பேச முடியாமல் அதை மூடி மறைத்து அமைப்பை நடத்துவது ஆர்.எஸ்.எஸ்.தான். அந்த அமைப்பின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநரைத்திரும்பப் பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மின்சார வாரியம் கைவிட வேண்டும். கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

Advertisment

சட்டப் பேரவையில் நிறைவேற்றும் தீர்மானம் மக்கள் நலன் சார்ந்தது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் ரத்து உட்பட சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களைகிடப்பில் வைத்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. அதை அவர் உடனடியாக செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வது உள்நோக்கம் கொண்டது. மோடி ஆதரவோடு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என்பதற்கான அடையாளம் இது. காவல்துறையால் தேடப்படுபவர்கள் அடைக்கலம் அடையும் இடமாக பா.ஜ.க. இருக்கிறது. அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்படுகிறது. அந்தக் கட்சி வித்தியாசமான கட்சி.

அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க.வின் செயல்பாடுகளுக்கு தேர்தலில் மக்கள் பதில் தந்து விட்டனர். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றி விட்டது. பலவற்றை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் தி.மு.க. பலமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்”எனத் தெரிவித்தார்.