Advertisment

வயநாடு இடைத்தேர்தல்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு!

CPI candidate announcement for Wayanad by election

Advertisment

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., இந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் நேற்று முன்தினம் (15.10.2024) அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி மற்றும் நவம்பர் 20ஆம் தேதி என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி ஜார்கண்டில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதோடு நாடு முழுவதும் காலியாக உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகாண்டில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அறிவித்திருந்தது. இந்நிலையில் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோக்கேரி போட்டியிடுகிறார் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பாஜகவின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

cpi Kerala wayanad
இதையும் படியுங்கள்
Subscribe