Skip to main content

அமைச்சர்கள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை லஞ்சம்! வேல்முருகன் கண்டனம்!

 

 velmurugan

 

அமைச்சர்கள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே, ஊழலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை உடனடியாகப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களின் சொத்துகளை முடக்கி, அவற்றை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சமீப காலங்களில் அரசு அலுவலகங்களிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் கணக்கு வழக்கின்றி பணம் விளையாடுகிறது. அப்படிப்பட்ட அதிகாரிகளில், சிலர் மட்டுமே அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வெளிச்சத்துக்கு வருகின்றனர்.

 

குறிப்பாக, சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.37 கோடி ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், 7 கோடி ரூபாய் மதிப்புடைய 18 சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது அனைத்தும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க தந்த லஞ்சப் பணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

இதே போன்று,  வேலூரில்  சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துகளுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

நாகையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளராகப் பணியாற்றிய தனராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியுள்ளது. இந்தப் பரபரப்பு ஓய்வதற்குள் மாநிலம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடிகளில் நடந்த அதிரடி சோதனையில் பல லட்ச ரூபாய் லஞ்சப் பணம் சிக்கியுள்ளது.

 

சுற்றுச்சூழல் துறை மட்டுமின்றி, தமிழக அரசின் இன்னும் பல துறைகளில் லஞ்சம் புரையோடிக் காணப்படுகிறது. உதாரணமாக, தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் உள்ள 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.24 லட்சம் ரூபாய் மற்றும் நூற்றுக்கணக்கான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது வெட்கக் கேடானது.

 

இப்படி லஞ்சம் வாங்கும் துணிவு, அரசு ஊழியர்களுக்கு எப்படி வந்தது, அதன் பின்னணி என்ன என்பதை நாம் ஆராய்ந்தால், இன்று உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் வரை லஞ்சப் பணம் பாய்வதே முக்கியக் காரணம்.

 

cnc

 

எனவே, ஊழலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை உடனடியாகப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களின் சொத்துகளை முடக்கி, அவற்றை அரசுடைமையாக்க வேண்டும். அரசு வேலை என்பது நாட்டு மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பணி. அதுவும் ஒருவகையில் பொதுச்சேவைதான் என்பதை அமைச்சர்களும், அரசு ஊழியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

அதுமட்டுமின்றி, லஞ்சம் கேட்பவரை அடையாளம் காட்டுவேன், லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்பது ஒன்றுதான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.