Skip to main content

தமிழக மக்களை எடப்பாடி அரசால் காப்பாற்ற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி? கே.எஸ்.அழகிரி

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

 

தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களையும் அச்சம், பீதியோடு வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிற அவர்களை எடப்பாடி அரசால் காப்பாற்ற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுநோய் 170 நாடுகளில் பரவி 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 31 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் 1,251 பேர் பாதிக்கப்பட்டு 32 பேர் பலியாயிருக்கிறார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67. நேற்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருக்கிறார். வரலாறு காணாத வகையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் ஏற்படப்போகிற விளைவுகள் குறித்து மிகுந்த தீவிர தன்மையோடு இப்பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் அணுகியதா என்பதை ஆய்வு செய்கிறபோது மிகுந்த வேதனை தான் மிஞ்சுகிறது.
 

கடந்த டிசம்பர் 31 ஆம் நாள் சீனாவில் வூஹான் நகரத்தில் தொற்றுநோய் பாதிப்புகள் குறித்து செய்திகள் வெளிவந்தன. ஜனவரி 7 ஆம் தேதி முதல் உயிரிழப்பு நடந்தது. ஜனவரி 25 ஆம் தேதி 56 மில்லியன் மக்கள் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இறுதியாக பிப்ரவரி 29 ஆம் தேதி 3,150 பேர் உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சீனாவில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. 
 

நமது மக்கள் தொகையை ஒத்த அளவிலான சீன நாட்டில் நிகழ்ந்த கொரோனா வைரஸ் உயிரிழப்புகளைப் பார்த்தபிறகு இந்திய அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மார்ச் 4 ஆம் நாள் தான் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வருகிற பயணிகளைப் பரிசோதிக்கிற நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு எடுத்தது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் அனைத்து சர்வதேச விமானங்கள் இந்தியாவிற்கு வருகை புரிவதைத் தடை விதித்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி 21 நாள் ஊரடங்கை நரேந்திர மோடி அறிவித்தார். இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், சிறு, குறு தொழில்கள், உணவகங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்டன. 

 

congress committee


நமது நாட்டில் ஏறத்தாழ 43 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர் . 90 சதவீத வேலைகள் இவர்களைக் கொண்டுதான் நடக்கிறது. 21 நாள் ஊரடங்கினால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை மோடி அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. நாடு முழுவதும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் 14 கோடி பேர் உள்ளனர். ஊரடங்கு அறிவிப்பினால் வேலை வாய்ப்பிழந்து உணவு கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. 
 

தோளில் குழந்தைகளைச் சுமந்துகொண்டு தலையில் மூட்டை முடிச்சுகளுடன் டெல்லியிலிருந்து நோய்டா வழியாக யமுனா  நெடுஞ்சாலையில் ஹரியானா, உத்தரபிரதேசம், பீஹார் மாநிலங்களை நோக்கி நடத்து செல்கிற காட்சியைப் பார்க்கிறபோது பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் ஏற்பட்ட கொடூர சம்பவங்கள் நினைவிற்கு வருகிறது. இந்த அவலநிலையை நரேந்திர மோடியால் எப்படிப் பார்த்து சகித்துக்கொள்ள முடிகிறது? இதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு அவர்களுக்குத் தங்குமிடத்தையும், உணவையும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக மத்திய அமைச்சர் ஜவடேகர் சாவகாசமாக எந்த சலனமுமில்லாமல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரைப் பார்த்து ரசித்து களிப்படைகிறார். நாடு தீப்பற்றி எரிந்தபோது ரோம் நாட்டு மன்னன் பிடில் வாசித்த கதை தான் நமக்கு நினைவுக்கு  வருகிறது. 

 

மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னாலே நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே, அனைத்துக்கட்சி தலைவர்கள், மாநில முதலமைச்சர்களுடன்  கலந்து பேசவோ பிரதமர் மோடி முன்வராதது ஏன்?  21 நாள் ஊரடங்கு அறிவித்தால் அதனால் நாட்டில் ஏற்ப்படுகிற விளைவுகள் குறித்து மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? ஊரடங்கு அறிவித்ததும் ரயில், பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டன. இந்த நிலையில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையில் அவர்கள் இருக்குமிடத்திலேயே தங்கவைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்திருக்க வேண்டும். அதை செய்யாத நிலையில் அவர்களைத் தங்கள் ஊர்களுக்குச் செல்ல வாகன வசதிகளைச் செய்துவிட்டு ஊரடங்கை அறிவித்திருக்கவேண்டும். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படாததன் விளைவாக பேருந்துகளிலும், அதன் மேல்பகுதிகளிலும் லாரிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்பட்டு பயணம் செய்ததன் விளைவாக தொற்றுநோயை தங்களது கிராமங்களுக்குக் கொண்டு சென்று பரப்புகிற மிக கொடூரமான நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. சமூக பரவல், தனிமைப்படுத்துதல் பற்றி தொலைபேசியில் உரையாற்றிய நரேந்திர மோடியே தொற்று நோய்ப் பரவலுக்கு காரணமாக இருந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 

அதேபோல தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டவேண்டும் என தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதற்கு எந்த அவசியவும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருக்கிறார். ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அதை முதலமைச்சர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்ற ஆளும்கட்சிக்கு சர்வாதிகார அணுகுமுறை வருவதற்கு எப்படி துணிவு வந்தது? அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட மறுத்த தமிழக முதலமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 

தமிழக சுகாதாரத்துறையிடம் 2,100 சுவாசக்கருவிகள் மட்டுமே உள்ளன. கொரோனா பாதிப்பு செய்திகள் கடந்த 3 மாதங்களாக நம்மை  அச்சுறுத்தி வருகின்றன. 2,500 சுவாச கருவிகளும், 25 லட்சம் எண் - 95 முகக் கவசங்களும் வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருக்கிறார். இத்தகைய காலதாமதமான நடவடிக்கையை விட அலட்சியமான போக்கு வேறெதுவும் இருக்க முடியாது. 
 

கேரள அரசு கொரோனாவை எதிர்கொள்ள ரூபாய் 20,000 கோடி ஒதுக்கியிருக்கிறது. நரேந்திர மோடி அரசு ரூபாய் 15,000 கோடியும், தமிழக அரசு ரூபாய் 3,000 கோடியும்  ஒதுக்கியிருக்கிறது. இத்தகைய குறைவான நிதியாதாரத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திலுள்ள 7 கோடி மக்களையும் அச்சம், பீதியோடு வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிற அவர்களை எடப்பாடி அரசால் காப்பாற்ற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.  இங்கு எழுப்பப்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளைக் குறித்து ஆய்வு செய்து இவற்றுக்கு உரிய தீர்வைக் காண போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.