ADVERTISEMENT

மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாகச் சென்னையில்தான் கடுமையான கரோனா பாதிப்பு: கட்டுப்படுத்தத் தவறியது ஏன்? -டாக்டர் ராமதாஸ் கேள்வி 

01:33 PM May 18, 2020 | rajavel



ADVERTISEMENT



கரோனாவைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்து விடாது. கரோனாவால் மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாகச் சென்னை தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டுப்படுத்தத் தவறியது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ADVERTISEMENT


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் புதிய கரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று கணிசமாக அதிகரித்து 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச அளவு ஆகும். கரோனா பரவல் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் ஒரு கட்டத்தில் வெகு சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அன்றைய நாளில் மொத்தம் 1,937 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1,101 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். அப்போது குணமடைந்தோர் விகிதம் இந்தியாவிலேயே, கேரளத்துக்கு அடுத்தபடியாக, 56.84% என்ற இரண்டாவது அதிகபட்ச அளவாக இருந்தது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, இந்தியாவில் கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 38% என்ற அளவுக்குச் சரிந்திருக்கிறது. இது தேசிய சராசரியை விட சற்று குறைவு ஆகும்.

தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தை அடைந்ததற்குச் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து பரவிய நோய்த் தொற்று தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் வேகமாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், சென்னையில் மட்டும் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படாதது ஏன்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்னையில் நோய்த்தடுப்பு பணிகள் திறம்பட மேற்கொள்ளப் படவில்லையோ? என்ற ஐயத்தை தான் இது ஏற்படுத்துகிறது. அவ்வாறு நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

கோயம்பேடு சந்தையிலிருந்து ஏப்ரல் மாத இறுதியில் தான் அதிக எண்ணிக்கையில் தொற்றுகள் பரவத் தொடங்கின. உடனடியாக நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டதுடன், மே 1 ஆம் தேதியே சென்னை மாநகராட்சிக்கான கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஜே.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். கோயம்பேடு சந்தையும் மே 4-ஆம் தேதியுடன் மூடப்பட்டு விட்டது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், அடுத்த 14 நாட்களில், அதாவது மே 13-ஆம் தேதிக்குள் சென்னையில் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நோய்ப்பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சென்னையில் கடந்த மே 1 ஆம் தேதி கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,082 மட்டும் தான். அது தற்போது 6,750 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 17 நாட்களில் 5,668 பேருக்கு புதியத் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. சோதனைகள் அதிகரிக்கப்படுவது தான் நோய்ப்பரவல் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அது ஓரளவுக்கு உண்மை தான் என்றாலும் கூட, 14 நாட்களுக்குப் பிறகும் கூட தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குக் காரணம் அதிக சோதனைகள் அல்ல.... நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் நிர்வாகம் கோட்டை விட்டு விட்டது தான். இப்புகாரை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்களைப் பட்டியலிட முடியும்.


கோயம்பேடு சந்தை மூலம் நோய்த்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன் கோடம்பாக்கம் மண்டலத்தில் இரட்டை இலக்கத்திலும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஒற்றை இலக்கத்திலும் தான் நோய்த்தொற்றுகள் இருந்தன. இராயபுரம், திருவிக நகர், தண்டையார் பேட்டை ஆகிய மண்டலங்கள் தான் முன்னணியில் இருந்தன. ஆனால், கோயம்பேடு நோய்ய்ப்பரவல் தொடங்கிய சில நாட்களில், சந்தையை ஒட்டியுள்ள பகுதிகளில் நோய்ப்பரவல் வேகமாக அதிகரித்து, கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தைப் பிடித்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாகவும், வளசரவாக்கம் மண்டலத்தில் 500க்கும் அதிகமாகவும் உயர்ந்தது. அந்த மண்டலங்களில் இப்போது நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. அதன்படி கோயம்பேடு மூலமான தொற்று கட்டுக்குள் வந்து விட்டது என்று வைத்துக் கொண்டாலும் இராயபுரம் மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நோய்ப்பரவல் மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நோய்ப்பரவலில் இராயபுரம் மண்டலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் நோய்ப்பரவல் நடவடிக்கைகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது; அதுதான் நோய்ப்பரவல் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது.

சென்னை மாநகராட்சிக்கான நோய்த்தடுப்பு சிறப்பு அதிகாரியாக இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட போது, கரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று நம்பினேன்; அதை வெளிப்படுத்தவும் செய்தேன். ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள், பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் சிறப்பு அதிகாரி, மாநகராட்சி ஆணையர், மண்டல பொறுப்பு அதிகாரிகள் என ஏராளமான மூத்த இ.ஆ.ப. அதிகாரிகள் இருந்தும் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியாதது பொதுமக்கள் மத்தியில் இதுவரை நிலவி வந்த நம்பிக்கையைக் குலைத்துள்ளது.

சென்னையில் கடந்த 10-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பொறுப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன், அடுத்த 5 நாட்களில், அதாவது 15-ஆம் தேதிக்குள் நோய்ப்பரவல் குறையத் தொடங்கும் என்று கூறினார். மே 13-ஆம் தேதி தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கரோனா சோதனை செய்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்களில் 2,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். ஆனால், அதன்பிறகும் நோய்ப்பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றால் நோய்த்தடுப்பு அணுகுமுறையில் என்ன தவறு? எந்த இடத்தில் தவறு நடந்தது? கோயம்பேடு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், இப்போது வேறு எந்த ஆதாரத்திலிருந்து நோய்ப் பரவுகிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்.

சென்னையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகரும், இ.ஆ.ப அதிகாரியுமான திருப்புகழ் தலைமையிலான உயர்நிலைக்குழு சென்னைக்கு வந்து 5 நாட்கள் தங்கியிருந்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தி அறிவுரைகளை வழங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒவ்வொரு நாளும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து காலையில் தலைமைச் செயலகத்திலும், மாலையில் அவரது இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்திலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா வைரஸ் நோய்த் தடுப்பில் முதலமைச்சர் பழனிச்சாமி காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால், களத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளைக் கொண்டிருந்தாலும் சென்னை மாவட்டத்தில் உள்ள 107 வார்டுகளில் மட்டும் தான் நோய்ப்பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக பாதிப்பு இல்லை. இத்தகைய சூழலில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து, மண்டல அளவில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக வார்டு அளவில் கவனம் செலுத்துவது பயனளிக்கக் கூடும். இதுபோன்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்தி கரோனாவைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்து விடாது. கரோனாவால் மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாகச் சென்னை தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையான 6,750 என்பது, இந்தியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அளவை விட அதிகமாகும். இதனால் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நம்பிக்கையைத் தராது; மாறாகச் சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். எனவே, இனியும் கரோனா தடுப்புப் பணிகளை வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும். சென்னையில் வெகு விரைவில் கரோனா பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி மக்களிடம் நிலவும் அச்சத்தை மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT