Skip to main content

மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம்... உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் மடல்

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

மக்களின் உயிர்தான் முதன்மையானது, அரசியல் பார்வைகள் - கருத்து வேறுபாடுகள் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் நம் பணிகளைத் தொடர்ந்திடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்டன. பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது மேலும் தொடருமா என்ற தவிப்பில், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மக்கள் இருக்கிறார்கள். கரோனா நோய்த்தொற்றிலிருந்து, 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களைக் காப்பதற்காக ஊரடங்கை நீடிக்க வேண்டியது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

 

mkstalin


இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து, பிரதமர் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது, கரோனா நோய்த்தொற்றினைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான  ஒத்துழைப்பு வழங்கும் என்பதையும், தமிழகத்தில் வேகமாக, பரவும் நோய்த்தொற்றினைத் தடுப்பதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்பதையும் பிரதமரிடம் வலியுறுத்தி, தி.மு.கழகத்தின் சார்பில், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் பங்கேற்பார் என்பதையும் தெரிவித்தேன்.

ஏப்ரல் 8-ம் தேதியன்று, பிரதமர் காணொளி வாயிலாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலு அவர்கள், “நாட்டின் நலன் - மக்களின் நல்வாழ்வு - நாட்டின் பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் காத்திடும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, இந்திய பிரதமர் அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் அவர்களும், கழகமும் உறுதியாகத் துணை நின்று, தேவையான ஒத்துழைப்புகளை ஊக்கமுடன் நல்கும் என்பதை, இந்தக் காணொளி காட்சியின் வாயிலாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் தொடங்கினார்.

கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மாநிலத்தின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தமிழக ஆளுங்கட்சியின் முதல்வர், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த 9 ஆயிரம் கோடி ரூபாயை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பதை டி.ஆர்.பாலு அவர்கள் வலியுறுத்தினார். அதுபோலவே, இதுவரை நிதி ஒதுக்கப்படாத புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
 

nakkhheran app



தமிழகத்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ள, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உரிய பரிசோதனைகளை விரைந்து முடிப்பதற்கான கருவிகள், தமிழக மருத்துவர்களுக்கான பி.பி.இ. பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை விரைந்து வழங்கிட வேண்டும் என்பதையும் தி.மு.கழகத்தின் சார்பில் பிரதமரிடம் டி.ஆர்.பாலு விளக்கிச் சொன்னார்.

ஏழை - எளிய மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஈரானில் சிக்கித் தவிக்கும் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் நலன்களுக்காகவும் பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது தி.மு.கழகம்.

இதில் அரசியல் பார்வை சிறிதுமின்றி, மத்திய அரசிடமிருந்து உரிமையின் அடிப்படையில், மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு கிடைத்திட வேண்டும் என்ற தமிழ்மக்கள் நலன் சார்ந்த பார்வை மட்டுமே அடிப்படையாக இருந்தது. மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பதும், உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதுமே தி.மு.கழகத்தின் அணுகுமுறையாக உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டாண்டு காலத்திற்கு நிறுத்தி வைத்து, அந்தத் தொகையை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பிரதமருடனான ஆலோசனையின்போது தி.மு.கழகம் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான அடிப்படை மருத்துவ வசதிகளில் குறைந்தபட்ச அளவினையாவது நிறைவேற்றுவதற்கு உதவுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியே!

கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அவரவர் தொகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும், அவர்களின் தொகுதி மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்காகவும் ஒதுக்கீடு செய்துள்ளனர். இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் அந்த நிதியை முடக்கி, மடை மாற்றுவது என்பது, மாநில நலன்களையும் அதன் உரிமைகளையும் ஜனநாயகத்தில் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ள பிணைப்பையும் துண்டித்திடும் என மத்திய அரசின் செயல்பாட்டுக்கு பிரதமர் முன்னிலையில் எதிர்ப்பினைப் பதிவு செய்தது தி.மு.கழகம்.

மத்திய அரசின் இந்த முடிவு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது. பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அனைத்து நிலைகளிலும் பிரித்துக் கொண்டு நிறைவேற்றப்பட்டால்தான், வேகமும் தரமும் இருக்கும் என்ற  நிர்வாக நெறியை நீர்த்துப்போகச் செய்வது!

அதேநேரத்தில், மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அல்லும், பகலும் செயலாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் ஈடுபாட்டையும் தி.மு.கழகம் இதயமார பாராட்டிப் போற்றுகின்றது. பாதுகாப்புடன் பணி செய்ய அவர்களுக்குத் தேவையானவற்றைக் கழகத்தினர் தம்மால் இயன்றவரை ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் பிரிவில், மயிலாப்பூரில் பணியாற்றிய காவலர் அருண்காந்தி, ஊரடங்கு பாதுகாப்புப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, மாரடைப்பினால் மரணமடைந்தார் என்ற துயரச் செய்தி  கிடைத்ததுமே அவரது குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவித்ததுடன், நெருக்கடி மிகுந்த சூழலில் பணிச்சுமையுடன் செயல்படும் காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாதவாறு பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளை காவல்துறை தலைவரும் தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன். காவலர் அருண்காந்தியின் இறுதி நிகழ்வில் கழக நிர்வாகிகள் நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
 

மக்களுக்குத் துணை நிற்போரை மனதார  பாராட்டி, மக்கள் நலன் காக்கும் களப்பணியில் தி.மு.கழகம் தொடர்ந்து உறுதியுடன் ஈடுபட்டு வருகிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அதுபோலவே, கழக மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணியின் பணிகளையும், அவ்வப்போது கேட்டறிகிறேன். அவர்கள் சிறப்பாக களப்பணியாற்றி வருகின்றனர். கழக  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்து, மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன். ஒவ்வொரு நாளும் கழகத்தினர் ஆற்றும் களப்பணிகளும் அதனால் காலத்தே மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளும் தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகளை நேற்று நான் நேரில் சென்று வழங்கினேன். சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கும், என்னுடைய தமிழாசிரியர் ஓய்வுபெற்ற பெற்ற அய்யா ஜெயராமன் அவர்களும், அவரது துணைவியாரும் தங்களின் வயது மூப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்குவதற்கு வெளியே செல்ல முடியவில்லை என்பதை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, என் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். கழக நிர்வாகிகளிடம் இது குறித்து தெரிவித்து, ஊரடங்கு காலத்தில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திடச் செய்தேன்.

உங்களில் ஒருவனான என்னைப்போலவே, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களில் பலரும், அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்ந்து உதவி வருவதை அறிந்து கொள்கிறேன். கழகம் எப்போதும் மக்களுக்குப்  பக்கத் துணையாக இருந்து ஊழியம் செய்திடும் என்பதைத் தமிழகம் முழுவதும் கழகத்தினரின் செயல்பாடுகள், இப்போது மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஊரக ஊராட்சிப் பொறுப்புகளில் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர்களிடமும், ஒன்றிய தலைவர்களிடமும் நேற்றும் இன்றும் கலந்தாலோசித்து ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள மக்களுக்குக் கிடைத்திட வேண்டிய மருத்துவ உதவிகள், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தி. மு. கழகத்தினர் அதிக அளவில் வெற்றி பெற்ற காரணத்திற்காகவே, அந்த அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியை ஆட்சியாளர்கள் வழங்காமல் வஞ்சிக்கும் நிலையிலும், அதனையும் கூட அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கழகம் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று, தனது பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

உலகம் இதுவரை கண்டிராத ஒரு பேரிடரை நாம் எதிர்கொள்கிறோம். இதில் மக்களின் உயிர்தான் முதன்மையானது, அரசியல் பார்வைகள் - கருத்து வேறுபாடுகள் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் நம் பணிகளைத் தொடர்ந்திடுவோம்.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உதவிகளையும் உரிமைகளையும் தொடர்ந்து வலியுறுத்துவோம். மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில  உரிமைகளைப் போற்றிடுவோம்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.