Skip to main content

மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்: மு.க.ஸ்டாலின்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

mk stalin


தமிழகத்தில் 710 பேர், பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 117 பேர் என மொத்தம் 827 பேருக்கு 28.05.2020 வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 559 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. ''அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே கரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்'' என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். 
 


இந்த நிலையில், ''தினமும் மாலையில் ஏதோ எண்ணிக்கையைச் சொல்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கக் கூடாது. எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதில் தலைநகர் சென்னையின் நிலைமை, மிகவும் அச்சம் தருவதாக உள்ளது. சென்னையில் மட்டும் முன்னெச்சரிக்கை என்ற பெயரால், அதிகாரிகள் குழுவை நியமனம் செய்து, எத்தனை நாள் ஆகிவிட்டது? - அதன்பிறகும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றால், இந்த அரசாங்கத்துக்குப் பேரிடர் காலத்தில் எப்படிச் செயல்படுவது என்பதே முழுமையாகத் தெரியவில்லை என்று அர்த்தம்'' எனக் கூறியிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய - மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை.

இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாள்தோறும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்போர் எண்ணிக்கையும், அதிகமாகிக் கொண்டேதான் போகிறதே தவிர; குறைந்த மாதிரி தெரியவில்லை.

நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்று, இதுவரை எடுத்துரைத்து வந்த இரண்டு அரசுகளும், தொற்றுப்பரவல் குறையாத நிலையில், என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு மக்களைத் தயார்ப்படுத்துவதும், மக்களுக்கு முன்கூட்டியே சொல்வதும், அரசாங்கத்தின் முக்கியக் கடமையாகும்.

கடைசி நிமிடம் வரைக்கும் மக்களைக் காத்திருக்க வைத்திருப்பதும், மக்களைப் பதற்றத்திலேயே வைத்திருப்பதும் மிகமோசமான செய்கைகள் ஆகும்.

எனவே, எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதனை அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவிய காலம் முதல் இதுவரை இவ்வளவு எண்ணிக்கையில் ஒரே நாளில் தொற்று ஏற்பட்டது இல்லை. மிக மிக அதிகமான எண்ணிக்கை இது!
 

 


தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆகும். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் மட்டும் 133 உயிர்கள் பலியாகி உள்ளன. இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதில் தலைநகர் சென்னையின் நிலைமை, மிகவும் அச்சம் தருவதாக உள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 203. சென்னையில் மட்டும் 100 உயிர்களை இழந்துள்ளோம். சென்னை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் மட்டும் நேற்று ஒரே நாளில் 5 பேர் இறந்துள்ளார்கள்.

கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது மரணம் மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது. தனது மகனுக்குப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் தனக்கும் பரிசோதனை செய்ய சசிகலா கேட்டுள்ளார். ஆனால் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பரிசோதனை செய்வோம் என்று அதிகாரிகள் சொன்னதால், வீட்டில் சசிகலா தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கும் நோய்த் தொற்று இருந்துள்ளது. அரசின் அலட்சியத்தால் தான் சசிகலா இறந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர், சிறிது காலம் சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் பரிசோதனை செய்பவராகத் தற்காலிகமாக இருந்துள்ளார். அவருக்கே இந்த நிலைமைதான் என்றால், சாதாரண பொதுமக்களது உயிரை இந்த ஆட்சியாளர்கள் எந்தளவு மதிப்பார்கள், காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியது இல்லை.

சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் அதிகமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறையைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கே சரியான பாதுகாப்பு இல்லை என்று தெரிகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பரிசோதனைகளைச் செய்திருந்தால், இவர்கள் இந்தளவு பாதிப்பை அடைந்திருப்பார்களா? நோய்த் தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தாததால் தானே, அவர்களால் இத்தனை பேருக்குத் தொற்று பரவியுள்ளது.

தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப் படுத்துவதற்கு ஏராளமான திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம் என்று சொல்லும் அரசு, அங்கு அவர்களைத் தங்க வைக்கத் தயங்குவது ஏன்?


‘பாசிட்டிவ்’ என்று உறுதி செய்யப்பட்டவர்களையும், “உங்களுக்கு அறிகுறி இல்லை” என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைப்பதால்தானே இந்தப் பரவல் அதிகம் ஆகிறது என்பதை அரசு உணர்ந்ததா?


இப்படி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்கள், அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிறார்களா?


அவர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு இருந்தால் இந்தளவுக்குச் சென்னையில் நித்தமும் எண்ணிக்கை அதிகமாகி வருமா?


தினமும் ஆலோசனைகள் செய்யும் முதலமைச்சர், என்ன மாதிரியான ஆலோசனை செய்கிறார்?


அவரும் கணக்குக் காட்ட, “நானும் செயல்படுகிறேன்” என்பதை ஊருக்குச் சொல்வதற்காக, நாள்தோறும் ஆலோசனை நாடகங்களை நடத்துகிறாரா?


சென்னையில் மட்டும் முன்னெச்சரிக்கை என்ற பெயரால், அதிகாரிகள் குழுவை நியமனம் செய்து, எத்தனை நாள் ஆகிவிட்டது? - அதன்பிறகும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றால், இந்த அரசாங்கத்துக்குப் பேரிடர் காலத்தில் எப்படிச் செயல்படுவது என்பதே முழுமையாகத் தெரியவில்லை என்று அர்த்தம்!


இராயபுரம், திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன; பாதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சரைச் சந்தித்த மருத்துவர் குழு, சென்னையில் மட்டும் ஜூன் மாதம் இறுதிக்குள் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகளவில் பரிசோதனைகள் செய்யாவிட்டால் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லியதாகத் தகவல்கள் வருகிறது. ஆனால் பரிசோதனைகள் செய்தால் எண்ணிக்கை கூடும் என்பதற்காகப் பரிசோதனை செய்யாமல் தவிர்க்கிறது தமிழக அரசு.
 

http://onelink.to/nknapp


நோயை மறைக்க முடியாது. அது இன்று இல்லாவிட்டாலும் இரண்டு நாளில் வெளியில் வந்துவிடும். எனவே, நோயை மறைப்பது என்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஆபத்து என்பதை முதலமைச்சர் உணரவேண்டும்.

 


தமிழகத்திலிருந்து சென்றவர்கள் மீண்டும் மாநிலத்துக்குள் வருவார்கள். அப்படி வருபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும். வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருப்பவர்கள், தங்களை அழைத்துவர தமிழக அரசு எந்த உதவியும் செய்வதில்லை என்று வீடியோக்கள் எடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களை அழைத்து வர வேண்டிய கடமையும் தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது. அவர்களைத் தனிமைப்படுத்திக் காக்க வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது.


மார்ச் 22- ஆம் தேதி தொடங்கி, மே மாதம் இறுதிவரைக்கும், 'கரோனா கட்டுக்குள் இருக்கிறது' என்று சொல்லியே காலத்தைக் கடத்திய தமிழக அரசு, மேலும் பரவாமல் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்ய வேண்டும். களப்பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களைக் காக்க வேண்டும். வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வந்து, அவர்களைத் தனிமைப்படுத்திப் பாதுகாக்க வேண்டும். இங்கே இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது மாநிலத்துக்குப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அறிகுறி இல்லை என்பதற்காக ‘பாசிட்டிவ்’ என்று முடிவுகள் வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனது கடமையிலிருந்து தமிழக அரசு நழுவக்கூடாது. சென்னைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். வீடுவீடாகப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்குள் அடங்காமல்தான் இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்.


இந்த நடவடிக்கைகளில் முதலில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும். தினமும் மாலையில் ஏதோ எண்ணிக்கையைச் சொல்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கக் கூடாது. எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என எச்சரிக்க விரும்புகிறேன். வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு இரையாகிவிடாதீர்கள் என்பதே எனது அனைத்துக் கோரிக்கைகளுக்குமான உண்மையான அர்த்தம் என்பதை முதலமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.