Skip to main content

இந்த 6 அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை... ராமதாஸ்

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
ramadoss




கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், உலக சுகாதார நிறுவனம் காட்டிய வழியில் 6 அறிவுரைகளை கடைபிடிப்பவையாக அமைய வேண்டும் என கூறியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கிலிருந்து வெளிவருவதற்கு உலகின் பல நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. ஊரடங்கால் உருக்குலைந்து போயிருக்கும் உலகப் பொருளாதாரத்தை சீரமைப்பது தான் உலக நாடுகளின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் வருங்காலங்களில் கரோனாவை விட மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் நோய் இன்று காலை வரை உலகின் 215 நாடுகளில் உள்ள 56 லட்சம் பேரைத் தாக்கியுள்ளது. இந்த நோய்க்கு 3 லட்சத்து 55,000 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பான்மையான நாடுகள் நோயின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத போதிலும், தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதால் நோய்த்தடுப்பு பணிகள் ஒருபுறம் தொடரும் நிலையில், மறுபுறம் பல நாடுகள் பொருளாதாரத்தை படிப்படியாக திறந்து விட்டு வருகின்றன. அடுத்து வரும் நாட்களில் இன்னும் கூடுதலான நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை முழுமையாக திறந்து விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தான் உலக சுகாதார நிறுவனம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

 

 


பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பசுமைக்கு சாதகமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அதற்காக 6 அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. 1. இயற்கையை பாதுகாக்க வேண்டும், 2. வீடுகளிலும், சுகாதார கட்டமைப்புகளிலும் தண்ணீர், துப்புரவு வசதிகளுடன் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தாங்கக்கூடிய தூய்மையான மின்சக்தியும் இருப்பதை உறுதி செய்தல், 3. கரோனாவுக்கு பிந்தைய நாட்களில் மக்கள் தூய காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையில், காற்று மாசை குறைக்கும் தூய மின்திட்டங்களில் அதிக முதலீடு செய்தல், 4. மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கட்டுபடியாகும் விலையில் கிடைப்பதை உறுதி செய்தல், 5. நீடித்த போக்குவரத்தில் தொடங்கி ஆரோக்கியமான இல்லம் வரை நகர்ப்புற திட்டமிடலின் அனைத்து அம்சங்களிலும் ஆரோக்கியத்தை இணைக்கும் வகையில் மாநகரங்களை அமைத்தல், 6. சுற்றுச்சூழலை மாசு படுத்தி காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் படிம எரிபொருட்களுக்கு மானியம் தருவதை நிறுத்துதல் ஆகியவை தான் அந்த அறிவுரைகளாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை மட்டுமின்றி தேவையானவையும் ஆகும். அற்புதமான இந்த யோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்த யோசனைகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருப்பதன் மூலம் சுற்றுச்சூழலைக் காப்பதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது ஒருபுறமிருக்க, உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்ட பிறகு, கடிவாளம் இல்லாத குதிரைகளைப் போல பொருளாதாரத்தை விரட்ட அந்த நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன. அவ்வாறு செய்வது இயற்கை சமநிலையை சிதைத்து, உலகம் இதுவரை காணாத பேரழிவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்  என்பதால் தான், பொருளாதாரக் குதிரைகளுக்கு கடிவாளம் கட்ட உலக சுகாதார நிறுவனம் முயல்கிறது.
 

nakkheeran app



உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைகளை பிற நாடுகளை விட இந்தியா தான் மிகக் கவனமாகவும், உறுதியாகவும் கடைபிடித்தாக வேண்டும். காரணம்... உலகின் மற்ற நாடுகளை விட பொருளாதார மீட்பு என்ற பெயரில் சுற்றுச்சூழலை சீரழிக்கும் பணிகளை இந்தியா தான் தொடங்கியுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அனல் மின்நிலையங்களை திறக்கக்கூடாது என்று ஐ.நா. அறிவுறுத்தியும் கூட, அதை மதிக்காமல் 500 நிலக்கரி சுரங்கங்கள் ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும்; அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த  ரூ.50,000 கோடி செலவிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒற்றை நடவடிக்கை உலக சுகாதார நிறுவனத்தின் 6 அறிவுரைகளையும் மீறியதாகும்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் முதல் ஆப்பிரிக்க நாடுகளில் தொடங்கி இந்திய எல்லைகள் வரை உழவர்களை நடுங்க வைக்கும் வெட்டுக்கிளி படையெடுப்பு வரை அனைத்து பேரழிவுகளுக்கும் காரணம் காலநிலை மாற்றம் தான். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் கரோனாவை விட  கொடிய நோய்கள் முதல் மனித குலத்தையே அழிக்கக்கூடிய புவிவெப்பமயமாதலின்  தீய விளைவுகள் வரை அனைத்தும் உலகை சிதைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. இப் பேரழிவுகள் குறித்து ஐ.நா. முதல் சுற்றுச்சூழல் அமைப்புகள் வரை அனைத்தும் எச்சரிக்கை விடுத்து வரும் போதிலும், அப்பேரழிவுகள் வருவதற்குள் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்வோம் என்ற எண்ணத்தில் இந்தியா  உள்ளிட்ட நாடுகள் இயற்கையை சிதைப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானதாகும்.

பொருளாதாரத்தை மட்டும் குவித்து வைத்து விட்டு, மனிதகுலத்தையே அழிவுக்கு ஆளாக்குவது அறிவார்ந்த செயல் அல்ல. எனவே, கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனம் காட்டிய வழியில் 6 அறிவுரைகளை கடைபிடிப்பவையாக அமைய வேண்டும். அதற்காக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 2015&ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை, ஐ.நா. அமைப்பின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.