Skip to main content

ஊரடங்கு கால மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈ.ஆர்.ஈஸ்வரன் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

E.R.Eswaran

 

சென்னை அண்ணாநகரில் ஊரடங்கு கால மின்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 

இந்தப் போராட்டம் குறித்து முன்னதாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கரோனா பாதிப்பிற்காக அரசாங்கம் ஊரடங்கு அமல்படுத்திய நாளிலிருந்தே ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணம் வாங்கக் கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளை விட்டு வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்த போதே மின்சார கட்டணம் கட்ட வேண்டியது இல்லை என்று அறிவித்திருக்க வேண்டும்.

 

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் இருந்தனால் தான் மின் கட்டணம் அதிகமாகி இருக்கிறது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. மக்கள் வீடுகளில் இருந்ததால் மின் உபயோகம் அதிகமாகி இருக்கிறது என்று புரிந்து கொண்ட மின்சார வாரியம் வேலைகளுக்கு போகாமல் வீடுகளில் இருந்த மக்களுக்கு வருமானம் இல்லை என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. சாதாரண நாட்களில் வருகின்ற மின்கட்டணத்தையே கடைநிலையில் இருக்கின்ற ஏழை எளிய மக்கள் மாதம் மாதம் செலுத்துவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

அப்படி இருக்கும் போது வருமானமே இல்லாமல் மின்கட்டணம் செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தினால் என்ன செய்வார்கள் என்று புரிய வேண்டாமா. அரசினுடைய வருமானத்தை நோக்கமாகக் கொண்டு நோய்ப் பரவினாலும் பரவாயில்லை என்று டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசு, மக்கள் எவ்வளவு வேதனைக்குள்ளானாலும் பரவாயில்லை என்று மின்சார வாரியத்தின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள்.

 

ஏழை மக்களின் வேதனைகளை ஏன் தமிழக மின்சாரத்துறை புரிந்து கொள்ள மறுக்கிறது. அதேபோல சிறு, குறு தொழிற்சாலைகளுடைய மாதம் மாதம் கட்டக்கூடிய நிரந்தர கட்டணத்தைத் தொழிற்சாலைகளை மூடிவிட்டு எப்படிக் கட்ட முடியும். செயல்படாமல் இருந்த பல சிறு, குறு தொழிற்சாலைகள் இனிமேல் நடத்த முடியாது என்ற நிலைக்கு வந்து மூடப்படுகின்ற தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசின் கட்டாய மின்கட்டணம் தான் காரணமாகி இருக்கிறது.

 

தாய் உள்ளத்தோடு மின்கட்டணம் வேண்டாம் என்று சொல்ல வேண்டிய தமிழக அரசு கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்கிறோம் என்று சொன்னது நியாயமா? தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து கட்டாயப்படுத்தினால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலையிழப்பு ஏற்பட்டு வீட்டு மின்கட்டணமும் செலுத்த முடியாமல் பலர் தற்கொலைகள் செய்து கொள்ள நேரிடும்.

 

விவசாயிகளுக்கான வாழ்வாதாரத்தைக் கொடுப்பதே இலவச மின்சாரம் தான். விவசாயிகளின் உயிர்நாடியாக இருக்கின்ற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயலும் மத்திய அரசுக்கு துணைபோகின்ற மாநில அரசின் நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியது.

 

திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இந்தக் கருத்துகளை வலியுறுத்தியது. தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்து வந்தாலும் தமிழக அரசும் மின்சாரத்துறையும் அதற்கு செவிசாய்க்கவில்லை. சாமானிய மக்களுடைய எதிர்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் நேரம் தமிழக அரசுக்கு வரும்.

 

மக்களுடைய எதிர்ப்பைக் கறுப்புக் கொடி போராட்டத்தின் மூலமாக அமைதியான முறையில் தெரிவிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. தமிழக மின்சாரத்துறை சாமானிய மக்களுடைய உண்மைநிலையைப் புரிந்து கொண்டு ஊரடங்கு காலத்திற்கான மின்கட்டண வசூலை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்.

 

                  http://onelink.to/nknapp

 

இன்றைக்கு எல்லோரையும் உயிரோடு வாழவிடுவது தான் முக்கியம். அரசினுடைய வருமானம் முக்கியமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கறுப்புக் கொடி போராட்டத்தில் இணைத்துக் கொண்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்திருக்கிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆங்காங்கே அமைதியான முறையில் கறுப்புக் கொடி போராட்டத்தை தி.மு.க.வோடு இணைந்து முன்னெடுக்க அழைக்கின்றேன்.

 

அனைத்து பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசினுடைய பார்வை சாமானிய மக்கள் மீது பட்டு மின்சார கட்டணத்தில் இருந்து விடுதலை பெற ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்திருந்தார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

'கணக்கெடுக்க ஆள் இல்ல; போன மாச கரண்ட் பில்லயே கட்டிடுங்க' - அதிர்ச்சியில் கிராம மக்கள்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

திருவாரூரில் மின் கணக்கெடுப்பு செய்ய ஆளில்லாததால் ஜூன் மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அலுவலகம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சாத்தனூர், சித்தாம்பூர், வேல்குடி, பழையனூர் ஆகிய கிராமங்களுக்கு வடபாதிமங்கலத்தில் மின் பொறியாளர் அலுவலகம் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இங்கு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் கடந்த ஆறாவது மாதம் (ஜூன்) கட்டிய மின் கட்டணத்தை இந்த மாதம் கட்டி விடுங்கள் என தினசரி பத்திரிகைகளில் வடபாதிமங்கலம் மின் பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிவிப்பில், ‘மின் கணக்கீடு செய்ய ஆள் இல்லை. அதனால் ஆறாம் மாதம் கட்டணத்தை செலுத்துங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்கள் கோடைக் காலம் என்பதாலும் பள்ளி விடுமுறைக் காலம் என்பதாலும் அதிகப்படியான மின் சாதனங்கள் இயக்கப்பட்டிருக்கும். இதனால் அதற்கான மின் கட்டணம் வந்திருக்கும். ஆனால் இப்பொழுது மின்சாரத்தின் பயன்பாடு ஓரளவு குறைந்திருக்கும். இதனால் ஆறாம் மாதத்திற்கான மின் கட்டணத்தை விட இந்த மாதம் மின் கட்டணம் கணக்கிடப்பட்டிருந்தால் குறைவாகத்தான் வந்திருக்கும். ஆனால் பழைய மின்கட்டணத்தையே கட்டச் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.