Skip to main content

துரத்திய கரோனா... கோவணத்துணியையும் உருவிய ஆம்னி பேருந்துகள்!


 

dddd

 

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மே-10 ஆம் தேதி முதல் இருவாரங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், பிழைப்புக்காக சென்னையில் வசித்துவந்த பலரும் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்கின்றனர்.

 

இவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு வசதியாக மே-8, 9 ஆகிய இரு தினங்களிலும் 24 மணிநேர போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கேற்ப, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், நேற்று (மே-8) மாலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், போதுமான அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதால் தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அதேசமயம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் பயணக்கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்திருந்தார்.

 

பொதுவாக, பண்டிகைக் காலங்களிலும் தொடர்விடுமுறை அறிவிக்கப்படும் தருணங்களிலும், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி பயணிகளின் ’பர்சை’ பதம்பார்க்கும் தனியார் ஆம்னி பேருந்துகள், கொரோனா பேரிடர் காலத்தில் கருணை காட்டுகின்றனவா என்பதையறிய கோயம்பேடு பேருந்து நிலையத்தை வலம் வந்தோம்.

 

அலைமோதும் அளவுக்கு கூட்டம் அவ்வளவாக இல்லை என்ற போதிலும், அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. நேற்று காலையில் முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்த உடனே பலரும், பேருந்து சேவை கிடைக்குமா? கிடைக்காதோ? என்ற ஐயத்தில் ஆன்லைனில் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

 

தனியார் ஆம்னி பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். “போன லாக்டவுனே பரவாயில்லை. மதுரைக்கு வழக்கமா ஸ்லீப்பர் கோச்ல 800-க்கு போவேன். போன லாக்டவுனுக்குகூட ஆயிரம் ரூபாதான் வாங்குனாங்க. இப்போ 1500 ரூபாய்” என்றார் ஒரு பயணி.

 

தெளிவான முகவரியோடு வழங்கப்பட்டிருந்த அந்த தனியார் ஆம்னி பேருந்தின் முன்பதிவு சீட்டில் மதுரை வரையில் பயணிக்க (ஸ்லீப்பர் கோச்) இருபயணிகளுக்கான கட்டணமாக ரூ.3147.90 என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இன்னொரு ஆம்னி பேருந்தில் மதுரைக்கு சீட் இருக்கா என்றோம். ”எல்லாம் ஆன்லைன் புக்கிங்க். ஒரே ஒரு சீட்  (சாதாரண இருக்கை) இருக்கு 1200 ரூபாய்” என்றார் அப்பேருந்தின் ஊழியர்.

 

இன்னொரு ஆம்னி பேருந்தில் ஆம்னி பேருந்தில் திருச்சி வரை செல்ல சாதாரண இருக்கைக்கு ரூ 700.00. மற்றொரு ஆம்னி பேருந்தில், ஸ்லீப்பர் கோச்சில் திருச்சிக்கு பயணிக்க 1400.00. “இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான். வரும்போது எம்ட்டி அடிச்சிதான் வந்திருக்கோம். வரும்போது 500 ரூபாய்க்கு வந்தோம். போகும்போது வேற வழியில்லை.” அநியாயக்கட்டணம் 1400.00-க்கு அப்பேருந்து ஊழியர் சொன்ன விளக்கம் இதுவொன்றுதான்.

 

வேதாரண்யத்திற்கு 750.00; சிதம்பரத்திற்கு 700.00. இதையெல்லாம் விட பெருங்கொடுமை, நாகர்கோயில் வரை பயணிக்க (கவனிக்க ஸ்லீப்பர் கோச் அல்ல குளிர்சாதன வசதி அல்லாத சாதாரண இருக்கைக்கு) அந்த இளைஞர் ஆன்லைனில் முன்பதிவு செய்த தொகை ரூ.2499.00.

 

இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. பத்து நிமிட இடைவெளியில் கிடைத்த விவரங்கள் இவை. நாம் குறிப்பிட்டிருக்கும் ஆம்னி பேருந்துகளைத் தவிர மற்ற ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.

 

இதுபோன்று, தனியார் ஆம்னி பேருந்துகளில் அநியாயக்கட்டணம் வசூலிக்கப்படுவதென்பது தமிழகம் அறிந்திராத அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றுமில்லை. அதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியமுமில்லை. மொபைலில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துக்கான ஆன்லைன் முன்பதிவு பொத்தானை அழுத்திய அடுத்தநொடியே எவரும் தெரிந்துக் கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

 

பயணிகளின் புகாருக்காக காத்திருக்காமல், கொரோனா பேரிடர் காலத்திலும் தொடரும் வழிப்பறிக்கு நிகரான இக்கட்டணக் கொள்ளையை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும்.

 

இளங்கதிர்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !