Skip to main content

மேலும் மேலும் ஊரடங்கு தேவையா? கி.வீரமணி

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
K. Veeramani




மேலும் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதினால் எவ்வித உருப்படியான பலனும் கிடைக்காது, மாநில அரசு  செயல்படவேண்டும் - மத்திய அரசு ஒருங்கிணைப்போடு நிற்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
 

அறிக்கை வருமாறு:
 

இந்திய நாட்டு அளவிலும், நமது மாநிலமான தமிழ்நாட்டு அளவிலும், வெளி மாநிலங்களான மகாராட்டிரம், குஜராத் போன்ற பல மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விஷம்போல் ஏறிக்கொண்டே இருக்கிறது.
 

தொடர்ந்து மூன்று ஊரடங்குகளுக்குப் பிறகும்கூட அது குறைந்தபாடில்லை.


இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் கவலையளிக்கிறது.
 

முழுக்க முழுக்க அறிவியல் - உளவியல் ரீதியாக அணுகவேண்டிய ஒரு தீர்வு - தடுப்பு முறைகளுக்குப் பதிலாக, மத்திய அரசு, ‘‘கைதட்டுங்கள்,  பால்கனியில் விளக்கு ஏற்றுங்கள்’’ என்றெல்லாம் கூறியது.
 

நமது மாநில முதலமைச்சர் உள்பட பலர் இதனைப் பின்பற்றத் தவறவில்லை.
 

‘லாவணிக் கச்சேரி’களுக்கு இது நேரமும் அல்ல; தேவையும் இல்லை!
 


என்றாலும்,  கரோனா நோய்த் தொற்று நாளும் இப்போது மேலும் மேலும் மிக அதிகமாகியுள்ள நிலையில், மத்திய அரசின் சுகாதாரத் துறையின் பேச்சாளர்கள், ‘‘கரோனாவுடன் வாழ்ந்து தீர நாம் பழகிடவேண்டும்; வாழ்ந்து தீருவதை தவிர வேறு வழியில்லை’’ என்று கைபிசைந்த நிலையில் கூறினாலும், மருத்துவப் பரிசோதனை கருவிகளையும், சோதனை கூடங்களையும் அதிகப்படுத்தி வருவது நம் மக்களுக்கு சற்று ஆறுதலையும், நம்பிக்கையையும் ஊட்டக் கூடியவையாகவும் உள்ளது. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா, இல்லையா என்றெல்லாம் விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கத் தேவையில்லை. அதுபோலவே அது எங்கிருந்து பரவியது? எப்படி? யார் யார் கூட்டிய பெருங்கூட்டத்தால் நடந்தது என்று பரஸ்பர புகார்கள், ‘லாவணிக் கச்சேரி’களுக்கு இது நேரமும் அல்ல; தேவையும் இல்லை!
 

 

இப்போது அவசரத் தேவை சரியான தடுப்பும், உரிய நிவாரணமுமே ஆகும்!
 

இனி நடப்பவைகள் நல்லவைகளாகட்டும்!
 

நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினர், தரப்பினர், எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி- கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற பேதாபேதமின்றி கலந்துரையாடி, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியுடன் நடத்தும் தொடர் போரின் ஒரு சிறந்த கூட்டு முயற்சியாக நடத்திட போதிய முயற்சிகளுக்கான சரியான இணைப்பு இல்லாதது வேதனைப்பட வேண்டியதும், விசாரத்திற்குரியதும் ஆகும்!
 

‘‘நடந்தவைகள் நடந்தவைகளாகட்டும்
இனி நடப்பவைகள் நல்லவைகளாகட்டும்!’’
 

கடந்த கால அனுபவத்திலிருந்து ஒன்றை மத்திய - மாநில அரசுகள் புரிந்து, இனி கரோனாவை எதிர்கொண்ட மக்கள் தம் வாழ்வை அமைத்துக் கொள்ளவே ஆழ்ந்து யோசித்து திட்டமிடல் வேண்டும்.
 

அனைத்து மக்கள் பசி தீர்த்தல், வேலை வாய்ப்பை உருவாக்கி வறுமையை ஒழித்தல் இவைகளுக்கே முன்னுரிமை கொடுத்து சிந்திக்கவேண்டும்.
 

அச்சு ஊடகங்களில் ஏராளமான தகவல்கள்!
 

மூன்று ஊரடங்குகளையும் தாண்டி கரோனா பாதிப்பு கூடுதலாகி வரும் நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களும், உதவிகளும் அடித்தட்டு மக்களாகிய தொழிலாளர்கள் - புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட - அமைப்புச் சாரா தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை - எளிய மக்களின் இன்னலை - வறுமையைத் தீர்க்கும் வகையில் அமையவில்லையே என்று பல நடுநிலையாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அச்சு ஊடகங்களில் ஏராளமான கட்டுரைகள் ஆக்கப்பூர்வ யோசனைகளுடன் வெளிவருகின்றன. இவற்றை ஆட்சியாளர்கள் படித்து அசை போட்டுச் சிந்தித்து செயலாற்றினால் நல்ல பயன் விளையும் என்பது நமது வேண்டுகோள்!

மேலும் மேலும் ஊரடங்கு தேவையா?

அறிவியல் மனப்பாங்கை (சயிண்ட்டிபிக் டெம்பர்) மக்கள் மத்தியில் பரப்பி, மருத்துவத் துறையில் மக்களின் அறிவுத் தேடல் பெருகி, அறியாமையை, மூடநம்பிக்கைகளை விரட்டி, தன்னம்பிக்கையைப் பெருக்கி வாழ வைப்பதே இப்போதைய முக்கிய தேவையாகும்!

மேலும், மேலும் ஊரடங்கை நீட்டிப்பதினால் எவ்வித உருப்படியான பலனும் கிடைக்காது. மக்கள் தாங்களே உணர்ந்து, தங்களைக் கட்டுப்பாடான நியதிகளுக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், மனோதத்துவ ரீதியாக மக்கள் பலவீனப்பட்டு விடுவார்கள் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு, மாநில அரசு இவைகளுக்கிடையே நல்ல புரிதலோடு - ஒருமித்த  ஒருங்கிணைப்பு முடிவுகளும் முக்கியம்.

 

nakkheeran app




ரயில்வே சேவை வேண்டாம் இம்மாதம்வரை என்று தமிழ்நாடு அரசு கூறியது, விமான சேவையும் இப்போது தமிழ்நாட்டுக்குள் தேவையில்லை என்று கூறியது - ஆனால், மத்திய அரசு இதை காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு வேறு வழியின்றி 25 விமானங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு வரலாம்  என்ற ஒரு தனிக் கட்டுப்பாட்டினைத்தான் அதனால் அறிவிக்க முடிந்தது!

அறம் சார்ந்தும் சரி - அரசமைப்புச் சட்ட உரிமைகள் சார்ந்தும் சரி, ஏற்கத்தக்கதல்ல!

மாநில அரசுகளை - தாராளமாக முடிவு எடுக்கவிட்டு, மத்திய அரசு ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருக்கவேண்டியதற்கு மாறாக, இதில் தலைகீழ் அணுகுமுறையே தொடக்கத்திலிருந்து பின்பற்றப்படுவது - அறம் சார்ந்தும் சரி - அரசமைப்புச் சட்ட உரிமைகள் சார்ந்தும் சரி - ஏற்கத்தக்கதல்ல. நிதி உதவிகளுக்குக்கூட - ‘தேசிய பேரிடர்’ என்று அறிவித்த நிலையிலும்கூட, இப்போது மாநில அரசுகளுக்கு நிபந்தனைச் சங்கிலி இணைப்பது எவ்வகையிலும் சரியல்ல என்று பல மாநில முதலமைச்சர்களே தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும்
 

ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்க
சரியான தருணம் இதுவே!
 

மேலும், கரோனா பரிசோதனை - ஆய்வுகளை பலப்படுத்தி, மக்களை அவர்களது சுயக் கட்டுப்பாட்டின் தேவைகளையும் அறிவுறுத்தி, அன்றாடப் பணிகள் - வாழ்வாதாரத்திற்குரியவைகள் பல்வேறு நிபந்தனைகளோடு - அனுமதிக்கப்படுவதே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமையவேண்டும்.

தமிழக அரசு  இதில் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து முடிவெடுக்க இதுவே சரியான தருணம். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.