i periyasamy mla - dmk

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

அதில், தற்போது நமது மாவட்டத்திலும் அதிவேகமாக இந்தக் கரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. அதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் அன்றாடம் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பரிசோதனை செய்யாமல் அதிகப்படியான வைரஸ் தொற்று உள்ளவர்கள் மாவட்டம் முழுவதும் இருக்கும் நிலை உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பழனி, ஒட்டன் சத்திரம், கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவிகள் அதிக அளவில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் காவலர்கள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களுக்கும் முகக் கவசங்கள் வைரஸ் தடுப்பு உடைகள் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை மீண்டும் அதிகப்படியாக வழங்கி வைரஸ் பரவாமல் தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும்.

i periyasamy mla - dmk

நோயைக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்டம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் அதிகப்படியான பரிசோதனைக் கருவிகளை வழங்கி தினமும் பரிசோதனைகளை அதிகப்படுத்தி பாதிப்பு உடையவர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்ட மக்களை இந்த கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Advertisment

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிதீவிரமாக கரோனா வைரஸ் பரவி வருகிறது அதன் மூலம் சமூக தொற்று பரவ போகிறது. கடந்த ஜூன் மாதம் 23 ஆயிரம் பேருக்கு இருந்த தொற்று தற்போது ஒரு லட்சத்தை எட்ட போகிறது. இதற்கு முழு காரணம் அரசுதான். இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். இந்தத் தொற்று முதன் முதலில் கேரளாவில் தான் வந்தது அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது கேரளஅரசு. அந்த அளவுக்கு இரண்டு மாதத்திற்கு அந்த மக்களுக்கு வீடுதேடி உணவுப் பொருட்களை வழங்கி வீட்டை விட்டு வெளியே வரவிடவில்லை. அதன் மூலம் 20ஆயிரம் கோடியை கேரளா அரசு செலவு செய்து மக்களைப் பாதுகாத்து இருக்கிறது.

ஆனால் இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கடந்த 3 மாதமாக வெளியே தலை காட்டவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் எங்கள் தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் கரோனா தடுப்புக்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. அதனாலேயே கரோனா பிடியில் தமிழகம் தீப்பிடித்து எரிகிறது. இதற்கு முழு காரணம் இந்த அ.தி.மு.க. அரசு தான். முதல்வரும் அறிவுரை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார். எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றுவது போல் நிலைதான் உள்ளது.

http://onelink.to/nknapp

இந்த நிலை நீடித்தால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் பல லட்சம் பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். அந்தளவுக்கு மாநில உரிமைகள் பறிபோகிறது. இந்த அரசும் கரோனா மூலம் ஆதாயம் தேடுகிறது என்றுதான் சொல்லமுடியும். ஆனால் எங்கள் தலைவர் ஸ்டாலினோ கரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடி வருகிறார். அது போல் தி.மு.க. தொண்டர்களும்கூட உயிரைத் துச்சமென நினைத்துப் போராடி வருகிறார்கள் என்று கூறினார்.