Coordinating Committee meeting of India alliance in Delhi

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்றது.

Advertisment

மும்பையில் நடைபெற்ற 3 வது கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது இந்தியா கூட்டணி, ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் கே.சி. வேணுகோபால், சரத்பவார், ராகவ் சத்தா, அபிஷேக் பானர்ஜி, டி.ராஜா, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஹேமந்த் சோரன், உமர் அப்துல்லா என மொத்தம் 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் டெல்லியில் உள்ள இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.