Skip to main content

'தொடர் புறக்கணிப்பு...'-வேறு மாநிலத்திற்கு ஆளுநராகும் தமிழிசை...?

Published on 17/04/2022 | Edited on 17/04/2022

 

 'Continuing boycott ...' - Tamilisai to become governor of another state ...?

 

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு செயலாற்றிவரும் தமிழிசை சௌந்தரராஜன் விரைவில் வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 1.9.2019 அன்று தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத்  தொடர்ந்து புதுச்சேரியில் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டு செயலாற்றி வந்தார். ஆளுநராக பொறுப்பேற்றபின் நடைபெற்ற தெலுங்கானாவின் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரின் உரை புறக்கணிக்கப்பட்டது தமிழிசைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தெலுங்கானா முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு, மோதல் போக்கு நடந்து வந்தது. அதேபோல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட யாத்திரி கோவில் திறப்பு விழாவிலும் தமிழிசை சௌந்தரராஜன் புறக்கணிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் அண்மையில் டெல்லி சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் இந்த பிரச்சனைகள், புறக்கணிப்புகள் தொடர்பாகக் கருத்துக்களை முன் வைத்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை தெலுங்கானா சந்திக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழிசையை மாற்றிவிட்டு புதிய ஆளுநரை தெலுங்கானாவுக்கு நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமுகமாக பணியாற்றும் வகையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழிசை ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கேரள ஆளுநராக உள்ள ஆரிப் அகமதுகான் தெலுங்கானாவின் கவர்னராக நியமிக்கப்படலாம், அதே நேரத்தில் கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராகவோ அல்லது புதுவைக்கு முழுநேர ஆளுநராகவோ தமிழிசை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்