Skip to main content

''ஈழத்தில் தொடரும் தாக்குதல்கள்... மன்னிக்க முடியாத போர்க்குற்றம்''-பாமக ராமதாஸ் வேதனை!

Published on 27/02/2022 | Edited on 27/02/2022

 

'' Continued attacks in Eelam ... unforgivable war crime '' - PMK Ramadas pain!

 

ஈழத்தில் தொடரும் இனவெறி தாக்குதலில் இருந்து தமிழர்களைக் காக்க ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா.  மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைக்கு எந்த வகையிலும் உதவாத சிங்கள அரசு, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வது கண்டிக்கத்தக்கதாகும்.

 

ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வரும் ஐ.நா.  மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக  ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 23&ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய அறிக்கை  ஒன்றை நேற்று முன்நாள் வெளியிட்டிருக்கிறது. இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், இலங்கையில் தமிழர்கள்  அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

 

போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு எதிரான குற்றங்களை மேலும், மேலும் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். குடிமைப் பணிகள்  உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் 31 அமைப்புகளை இலங்கை இராணுவம் தான் நிர்வகிக்கிறது. காவல் துறையின் பணிகளையும் இராணுவமே மேற்கொள்வதால் வடக்கு மாநிலத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள்  கொடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் புத்தமத பாரம்பரிய சின்னங்களைக் காப்பது, காடுகளை காப்பது என்ற பெயரில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரத்திற்கும்  அதிக ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 2021&ஆம் ஆண்டு நவம்பர் வரை நிலம் சார்ந்து 45 மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்து ஆலயங்களில் புத்தர் சிலை சட்டவிரோதமாக நிறுவப்படுகிறது.

 

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பன உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அதிர்ச்சி அளிப்பவையாகும்.

 

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாங்களாகவே நடவடிக்கை எடுக்கப் போவதாக 2 ஆண்டுகளுக்கு முன் மனித உரிமைப் பேரவையில் வாக்குறுதி அளித்த இலங்கை, அதை நிறைவேற்றவில்லை. மாறாக, தமிழர்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தும் பணிகளைத் தான் செய்து வருகிறது. தமிழர்களின் நிலங்களை பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, அவர்களை அவர்களின் சொந்த பூமியிலிருந்து வெளியேற மறைமுகமாக அழுத்தமும், மிரட்டலும் விடுப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு விதிகளின்படி இவையும் இனப்படுகொலைக்கு ஒப்பான செயல்கள் தான் என்பதில் ஐயமில்லை.

 

மன்னிக்க முடியாத அளவுக்கு போர்க்குற்றங்களை இழைத்த ஒரு நாடு, அது குறித்த குற்ற உணர்வே  இல்லாமல் தொடர்ந்து இனவெறித் தாக்குதல்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதிலும் குறிப்பாக உணவுக்கும், எரிபொருளுக்கும் வழி இல்லாமல் தவிக்கும் இலங்கைக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் இந்திய அரசு, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டை வேடிக்கை பார்க்கக் கூடாது. இலங்கைக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல், அதன் இனவெறித் தாக்குதல்களைத் தடுக்காமல் உதவிகளை மட்டும் வழங்குவது இலங்கையின் செயல்களுக்கு இந்தியா துணை போவதாகவே பார்க்கப்படும்.

 

பொதுவான கடமைகளைக் கடந்து ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையில், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் சிறப்புக் கடமையும் இந்தியாவுக்கு உண்டு. அதனால், ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது; ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று  இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். அதைத் தான் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் மார்ச் 3ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த விவாதத்தில் இந்திய அரசின் பிரதிநிதி கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதையும், இலங்கை இனச் சிக்கலுக்கு  நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.