Advertisment

தொகுதி பங்கீடு; திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை!

constituency alottment Talks between DMK and Congress

Advertisment

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. இதுகுறித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் ஆகியோர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதே சமயம் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டிருந்தார். அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான இந்த குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த குழுவின் தலைவராக கே.எஸ். அழகிரி செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த குழுவில் ப. சிதம்பரம், செல்வப் பெருந்தகை, குமரி அனந்தன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் இன்று (28.01.2024) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe