constituency alottment Mallikarjuna Kharge meets CM MK Stalin

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

அதே சமயம் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது, தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான இந்த குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த குழுவின் தலைவராக கே.எஸ். அழகிரி செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த குழுவில் ப. சிதம்பரம், செல்வப் பெருந்தகை, குமரி அனந்தன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Advertisment

இதனையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவுடன் கடந்த 28 ஆம் தேதி (28.01.2024) முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை வரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். அப்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்யப்பட்டு அது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பிப்ரவரி 9 ஆம் தேதி திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.