UP Congress withdrawing from the by-election contest for  problem with block allocation

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது உத்தரப் பிரதேச மாநில எம்.எல்.ஏக்கள் 9 பேர், போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றனர். இதனால், அந்த தொகுதிகள் காலியாகின. இதனை தொடர்ந்து, சிசாமாவ் தொகுதியின் சமாஜ்வாதி எம்.எல்.ஏவான இர்ஃபான் சோலங்கி, கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகின.

Advertisment

இந்த நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலோடு, உத்தரப் பிரதேசத்தின் 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால், கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், சமாஜ்வாதி கட்சியோடு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், இடைத்தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்துள்ளது. இதனால், கூட்டணி கட்சிக்குள் தொகுதிபங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாமல் இருக்கிறது.

Advertisment

தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாவிட்டால், உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலக காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.