Advertisment

காங்கிரஸ் செயற்குழுவில் கூட்டணி ஆட்சி குரல்! அறிவாலயத்தை எட்டிய ரிப்போர்ட்!

Congress wants coalition government in Tamil Nadu

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு 22-ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ், சசிகாந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கட்பர்ட், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எதிராக நடத்தப்படும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று சமீபத்தில் கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. இந்த போராட்டங்களை மக்கள் மத்தியில் எந்த வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஆலோசிப்பதற்காகத்தான் இந்த செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், கூட்டப்பட்டதன் நோக்கத்தைத் தவிர்த்து, கூட்டணி ஆட்சி குறித்த கருத்துக்கள்தான் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன.

Advertisment

திருநாவுக்கரசு தான் இதனை தொடங்கி வைத்திருக்கிறார். அதாவது, "திமுக கூட்டணியில் நாம் இருக்கிறோம். ஆனால், அடிமை கிடையாது. காங்கிரசின் வளர்ச்சிக்காக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது நமது உரிமை. அந்த வகையில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தவும், ஆட்சியில் பங்கு கேட்பதும் எப்படி தவறாகும்? எதற்காக இதைப் பற்றிப்பேசவே பயப்படுகிறீர்கள்? காங்கிரஸ் கட்சி கோழையா? நாம் கோழைகளா? பேசவே பயப்பட்டால் மக்களை சந்தித்து எப்படி கட்சியை நாம் வளர்க்கமுடியும்? திமுகவில் கூட்டணி ஆட்சியை கேட்கக் கூட பயந்தால் எப்படி? துணிச்சலாக கேட்கவேண்டும். இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை எடுங்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

Advertisment

இதே தொனியில் பேசிய மூத்த தலைவர் கே.ஆர். ராமசாமி, செல்வப்பெருந்தகையைப் பார்த்து, "உங்களை வருங்கால துணை முதல்வரே என்று ஒருவர் போஸ்டர் அடித்ததற்காக அவரை கட்சியை விட்டு நீக்குவேன் என்று சொல்கிறீர்கள். இதுதான் உங்கள் தைரியமா? அப்படி போஸ்டர் அடித்ததால் யாருக்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்? வருங்கால முதல்வரே என்று நான் போஸ்டர் அடிக்கிறேன். என்னைக் கட்சியை விட்டு நீக்கி விடுவீர்களா? நமது உரிமையைக் கேட்கக்கூட நாம் பயந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை. 20 சீட்டுக்கும் 25 சீட்டுக்கும் கையேந்தும் நிலையை தவிர வேறு எதுவும் நடக்காது " என்று அவர் பாணியில் ஆவேசப்பட்டார்.

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ.க்கள் உள்பட பெரும்பாலும் இதே கருத்தையே வலியுறுத்தினர். தங்கபாலு, கே.எஸ். அழகிரி ஆகியோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பேசினர். செல்வப்பெருந்தகை பேசும் போது, "கூட்டணி, கூட்டணி ஆட்சி என்பதெல்லாம் நம் கையில் என்ன இருக்கிறது? மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ அதை செயல்படுத்துவது தான் நம்முடைய வேலையாக இருக்கிறது" என்று பேசினார். இறுதியில் பேசிய மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர், "திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்பது நமது உரிமை. அப்படி கேட்பது தவறு என்று சொல்ல முடியாது. ஆட்சி அதிகாரத்தில் நாம் இல்லாதுதான் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அப்படியே இருக்கிறது. இது குறித்து டெல்லியில் நான் பேசுவேன்" என்று சொல்லியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் செயற்குழுவில் எதிரொலித்த குரல்கள் தற்போது அறிவாலயத்தை எட்டியுள்ளது.

Selvaperunthagai congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe