Skip to main content

“வரலாறு அறியாத பிரதமர்..” - கே.எஸ். அழகிரி காட்டம்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Congress TamilNadu leader statement on PM Modi's speech in parliament

 

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று விளக்கம் அளித்துப் பேசினார். இதில் பிரதமர் மோடி அதிகப்படியான நேரம் காங்கிரஸ் குறித்துப் பேசினார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் வரலாறு காணாத வன்முறையை எதிர்கொண்டு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மனித சமுதாயம் இதுவரை காணாத கொடுமை பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை 160 பேர் பலியாகி உள்ளனர். ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசத் தயாராக இல்லை. 3 பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று வன்முறையாளர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தது சமூக ஊடகங்களில் வெளிவந்த போது தான் ஜூலை 20 அன்று பாராளுமன்றம் கூடியது. அன்று காலையில் தான் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வெளியே ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் 36 நொடிகள் மணிப்பூரைப் பற்றிப் பரிவு காட்டி பேசியிருக்கிறார். அத்தகைய பேச்சை பாராளுமன்றத்திற்கு உள்ளே வந்து பேச அவர் தயாராக இல்லை. 

 

Congress TamilNadu leader statement on PM Modi's speech in parliament

 

இதுகுறித்து விவாதிக்க முயற்சி செய்து வாய்ப்பு இல்லாத நிலையில் தான் பிரதமர் பேச வலியுறுத்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி 37 நிமிடங்கள் பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 மணி நேரம், பிரதமர் மோடி 2 மணி 10 நிமிடங்கள் பேசினார். அதில், பிரதமர் பேச்சில் முதல் 90 நிமிடம் வரை மணிப்பூரைப் பற்றி பேச முன்வரவில்லை. எதிர்க்கட்சிகள் மீது, குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது ஆதாரமற்ற அவதூறுகளை பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல பிரதமர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் மக்களவையில் பேசுவதைச் சகித்துக் கொள்ளாத எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதோ அதுகுறித்து பேசாமல் புறக்கணித்ததனால் தான் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது.

 

பிரதமர் உரையில் அடிப்படை ஆதாரமில்லாமல் அவதூறான கருத்துகளைத் தொடர்ந்து பேசியிருக்கிறார். தேசியக் கொடியிலிருந்து மூவர்ணத்தை காங்கிரஸ் எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார். விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சியின் ராட்டை பொறித்த மூவர்ணக் கொடியை அடிப்படையாக வைத்து, அதில் அசோக சக்கரத்தை இடம் பெறச் செய்து அன்றைய அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு அறிமுகம் செய்து உருவானது தான் தேசியக் கொடி. தேசியக் கொடியின் வரலாறு அறியாத ஒருவரை பிரதமராக நாம் பெற்றிருக்கிறோம். 

 

Congress TamilNadu leader statement on PM Modi's speech in parliament

 

1947-க்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பிறகு தொடர்ந்து 52 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றவில்லை. விடுதலைப் போராட்டத்திலோ, வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலோ பங்கு கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்., வழிவந்த பா.ஜ.க., 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று செய்த தியாகத்திற்கு இதை விட ஒரு அவமானம் தேவையில்லை. மேலும் காந்தி என்ற பெயரையும் திருடிக் கொண்டது என்று கூறியிருக்கிறார். இந்திராகாந்தி அவர்களுடைய கணவர் பெயர் பெரோஸ் காந்தி என்பதால் தான் காந்தி என்ற பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என அழைக்கப்படுவது மோடிக்கு ஏன் புரியவில்லை?

 

மாமேதை அம்பேத்கரை இரண்டு முறை தோற்கடித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று ஒரு அபத்தவாதத்தை பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடந்தபோது, லாகூர் பகுதியிலிருந்து பி.ஆர். அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார். பிரிவினைக்குப் பிறகு அந்த பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டதால் அன்றைய பம்பாய் பகுதியில் காங்கிரஸ் உறுப்பினரை பதவி விலகச் செய்து அந்த இடத்திலிருந்து பி.ஆர். அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு மீண்டும் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி.

 

Congress TamilNadu leader statement on PM Modi's speech in parliament

 

அதைத் தொடர்ந்து காந்தி, நேரு பரிந்துரையின்படி அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக நியமித்து இன்றைக்கு 75 ஆண்டுகளாக இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதுகாத்து வருகிற அரசமைப்புச் சட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மூலமாக அரசியல் நிர்ணய சபை நாட்டு மக்களுக்கு வழங்கியது. இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் கட்சியினரின் ஒத்துழைப்பு தான் காரணம் என்று பி.ஆர். அம்பேத்கர் பாராட்டியதை பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 

இந்தியா என்பது வட இந்தியா மட்டுமல்ல என்று தமிழக அமைச்சர் பேசியதாக குற்றச்சாட்டை பிரதமர் மோடி கூறியிருக்கிறார். மத்திய பா.ஜ.க. அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல் திட்டங்களை தீட்டுவதிலும், நிதிகளை ஒதுக்குவதிலும் மாநிலங்களுக்கிடையே அப்பட்டமான பாரபட்சத்தை பா.ஜ.க. கடைப்பிடிப்பதை கண்டிக்கும் விதத்தில் தான் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர் அப்படி கருத்து கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதியையும், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படுகிற நிதியையும் ஒப்பிட்டால் ஒன்றிய பா.ஜ.க. அரசு எவ்வளவு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

Congress TamilNadu leader statement on PM Modi's speech in parliament

 

வடகிழக்கு மாநிலங்களை நேரு புறக்கணித்தார் என்று ஒரு அவதூறான கருத்தை பிரதமர் மோடி பேசியிருக்கிறார். பண்டித நேரு பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு 1937ல் அசாமில் 8 நாட்கள் தங்கியிருந்து வடகிழக்கு மாகாணத்தில் வாழ்கிற நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை நேரில் ஆய்வு செய்து அவர்களின் தனித்தன்மையையும், நில உரிமைகளையும் பாதுகாக்க தீவிரமான கருத்துகளை அன்றைக்கே வெளிப்படுத்தியவர் பண்டித நேரு. 1962 ஆம் ஆண்டு 13வது அரசமைப்புச் சட்ட திருத்தத்தின்படி நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவித்தவர் பண்டித நேரு. வடகிழக்கில் உள்ள 7 மாகாணங்கள் மீது, அங்கு வாழ்கிற பழங்குடியின மக்கள் மீது, அவர்களது பண்பாடு, கலாச்சாரத்தை மதித்து பண்டித நேரு போற்றியதைப் போல வேறு எந்த பிரதமரும் செய்ததில்லை. அதைச் சிறுமைப்படுத்துகிற வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்துகிற அரசியலின் தொடர்ச்சியாகத் தான் மணிப்பூர் மாநிலம் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. குக்கி பழங்குடி மக்களும், சமவெளியில் வாழ்கிற மைத்தி மக்களும் எந்த காலத்திலும் இணைந்து வாழ முடியாத நிலையை பா.ஜ.க. உருவாக்கியிருக்கிறது. பிரேம்சிங் தலைமையிலான ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்ததனால் உச்சநீதிமன்றம் கலவரம் தொடர்பான விசாரணை நடத்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட பெண் நீதிபதி குழுவை அமைத்துள்ளது.

 

Congress TamilNadu leader statement on PM Modi's speech in parliament

 

மணிப்பூர் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளனர். 11 வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளன. விசாரணையை கண்காணிக்க முன்னாள் மகாராஷ்டிர மாநில டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பதிவு செய்த வழக்குகளை ஆய்வு செய்ய 42 புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வெளி மாநில டி.ஐ.ஜி.க்கள் கண்காணிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. ஒன்றிய மோடி அரசால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்காது என்ற காரணத்தினால் தான் உச்சநீதிமன்றம் நேரடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதைவிட பிரதமர் மோடிக்கு வேறு அவமானம் இருக்க முடியாது.

 

கடந்த 20 நாட்களாக நடைபெறுகிற பாராளுமன்ற கூட்டத்திற்கு வராத மோடி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பேசுவதற்கு வந்ததே மிகப்பெரிய ஜனநாயக கடமையாகக் கருதுவது தான் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய அவமதிப்பாகும். பாராளுமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாகும். அந்த அவைக்கு வர விரும்பாதது பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத உணர்வும், பாசிச, சர்வாதிகார போக்கும் தான் வெளிப்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கேடாக அமையும் என்று கூற விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.