Advertisment

சத்தியமூர்த்தி பவன் மோதல்; காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட் ?

Congress Satyamurthy Bhavan Riot; MLA Ruby Manokaran suspended

Advertisment

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய ஜெயக்குமார், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளைக் காரணம் ஏதும் கூறாமல் பதவி நீக்கம் செய்து புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

திருநெல்வேலி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் அவராகவே நிர்வாகிகளை மாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயக்குமாரின் இத்தகைய முடிவு கட்சியின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று நினைத்த காங்கிரஸ் தொண்டர்கள் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால் கட்சிக்காரர்கள் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனிடையே கட்சிக்காரர்களிடையே தள்ளுமுள்ளு உண்டாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கட்சிக்காரர்களின் செயலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்ய மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியிலிருந்தே நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

congres
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe