Skip to main content

அஸ்ஸாம் முதல்வருக்கு காங்கிரஸ் பதிலடி

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Congress replay to Assam Chief Minister

 

ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை வரும் 2024ம் ஆண்டில் ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளும், சில தேசியக் கட்சிகளும் ஒரு கூட்டணியை அமைத்து அதன் செயல்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன. அதன்படி, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம்  23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன.

 

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், கட்சிகளின் மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

 

அசாம்  மாநில முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்கட்சிகளின்  ‘இந்தியா’ எனும் பெயரை விமர்சித்திருந்தார். அதில் அவர், “நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நம் முன்னோர்கள் பாரதத்திற்காகப் போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காகப் பாடுபடுவோம்; பாரதத்திற்காக பா.ஜ.க.” எனப் பதிவிட்டிருந்தார்.

 

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், “அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின்  புதிய வழிகாட்டியான மோடி திறன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என பல  திட்டங்களுக்கு இந்தியா என்று பெயர் சூட்டுகிறார். பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களை ‘டீம் இந்தியா’வாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால், 26 எதிர்க்கட்சிகள் இணைந்து தங்கள்  கூட்டணிக்கு இந்தியா (இந்திய தேசிய வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணி) என்று அழைக்கும் போது, ​​அவர் இந்தியாவைப் பயன்படுத்துவது ‘காலனித்துவ மனநிலையை’ பிரதிபலிக்கிறது என்று கூறுகிறார். இதை முதலில், அவர் தனது முதலாளியிடம் ( பிரதமர் மோடி) தான் கூற வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

 

அதனை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் தனது டிவிட்டர்  பக்கத்தில், “இதன் மூலம் பாஜகவின் பிளவுபடுத்தும் போக்கு முழு அளவில் வெளிப்படுகிறது. இந்தியா என்பது பாரதம், பாரதம் என்பது இந்தியா. மக்களை மதம், ஜாதி, சமூகம், இனம் மற்றும் பிராந்திய அடிப்படையில் தினந்தோறும் பிரிக்கிறீர்கள். நமது தேசபக்தி, நமது சகோதரத்துவம் மற்றும் நமது நல்லிணக்கமே நம்மை இந்தியர்களாக்குகிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.  

 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா எனும் கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கிடைக்காததால் நீங்கள் அதிருப்தி அடைந்ததாக பா.ஜ.க தலைவர் கஷில் மோடி கூறுகிறாரே? என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு நிதிஷ்குமார், “அவர் பேச்சையெல்லாம் யார் சீரியஸாக எடுத்துக் கொள்வார்” என பதில் அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்