Skip to main content

70 தொகுதிகளில் நிற்க வேண்டிய காங்கிரஸ் கட்சி... சொல்கிறது ம.நீ.ம.

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

ddd

 

‘மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது’ என்று மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கூறியிருக்கிறார். ‘திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுதான் பிரச்சனை. கூட்டணி உறுதிதான் என்று காங்கிரஸ் கட்சியினர் சொல்கிறார்கள். திமுகவினரும் சொல்கிறார்கள். அதற்குள், ம.நீ.ம. கட்சிக்கு வர வேண்டும் என்று அழைப்பது சரியா?’ என்ற கேள்விக்கு ம.நீ.ம. செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் பதில் அளித்துள்ளார்.

 

அதில், “தொகுதிப் பங்கீட்டில் முன்ன பின்ன இருக்கும் என்பதற்காக ஒருவர் கண்ணில் கண்ணீர் வருமா? ஏதோ மனம் புண்படும் அளவுக்கு நடந்திருந்தால்தான் வரும். பாராளுமன்றம் என்றால் 3இல் இரண்டு பங்கு, சட்டமன்றம் என்றால் 3இல் ஒரு பங்கு என்று இருந்தது. ஏறக்குறைய 60, 70 தொகுதிகளில் நிற்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, 50 ஆகி, 40 ஆகி இன்று 20இல் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்காத திமுகதான் பி டீம். மதவாதத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அந்த எண்ணத்திற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியை ஒடுக்கும் திமுகதான் பி டீம் என்று எங்கள் தலைவர் கமல் பேசியிருக்கிறார். 

 

அதற்கு ஏற்றதுபோல் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டார் என்று செய்தி வந்தது. கண்கள் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் மனம் கஷ்டப்பட்டிருக்கும்போது, நாங்கள் ஆறுதலாக சொன்னோம். 

 

காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, ‘சமூக நீதியைப் பேசியவர்தான் என்னுடைய தம்பி திருமாவளவன். ஆறு தொகுதிகளை ஒதுக்கி உள்ளனர். என் தம்பி இங்கு வர வேண்டியவர். அதனை அடுத்த தேர்தலில் பார்ப்போம்’ என்று கூறியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை பேதமில்லாமல் அனைவரையும் கூப்பிடுகிறோம்.

 

திமுக, அதிமுக வேண்டாம் என்றுதான் மக்கள் நலக் கூட்டணி வைத்தார்கள். இப்போது திரும்பவும் அங்கே இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திருந்தியிருக்க வேண்டும் அல்லது அவர்களைத் தவறாக புரிந்துகொண்டோம் என்று இவர்கள் திரும்பிப் போயிருக்க வேண்டும். இதனை அவர்களால் விளக்கவும் முடியாது. பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்று பயப்படுகின்றனர். அதனால் அங்கு மீண்டும் சென்றுள்ளனர். ஏன், மீண்டும் மோதிப் பார்ப்போம் என்று அழைக்கிறோம். 

 

நாங்கள் ஏன் திமுகவை பி டீம் என்று சொல்கிறோம் என்றால், பாஜகவுக்கு எதிரான வலுவான கட்சி காங்கிரஸ். தேசிய கட்சியைப் பலவீனப்படுத்துகிறார்கள் என்பதால் திமுகவை பி டீம் என்று சொல்லுகிறோம். அந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை அழைக்கிறோம். சுதந்திரமான கூட்டணி வைக்கலாம், அதற்கான உரிமை, நியாயம் எங்களிடம் இருக்கிறது என்று அழைக்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்