Skip to main content

வீட்டை விட்டு யார் வெளியில் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுங்கள்... கரோனா ஒழிப்புக்காக இ.பி.எஸ்.க்கு கடிதம் எழுதிய காங்., எம்.பி... 

 

congress mp K.Jayakumar - edappadi palanisamy

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான டாக்டர் கே. ஜெயக்குமார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். 

 

அந்தக் கடிதத்தில், தாங்கள், 30/07/2020 அன்று கரோனா குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதால்; அதன் தொடர்பாக ஒருசில கருத்துகளை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருவதே என் கடிதத்தின் நோக்கம். தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்; திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற சென்னை அடுத்த மாவட்டங்களில் தீவிரமாகப் பரவுவதைப் புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

 

ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியாகவும், மிக நெருக்கமான மக்கள் தொகையுமுள்ள மும்பை - தாராவி பகுதியில் கரோனாவைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை உலக சுகாதார நிறுவனம் முதல் மும்பை முதல்வர் வரை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். நமது அண்டை மாநிலம் கேரளாவும் இதில் மெச்சத்தக்க வெற்றி பெற்றுள்ளது. வேறு எதையும் நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ளத் தேவையில்லை.


அதிக தாக்கத்திற்கு உள்ளான நம் 3 மாவட்டங்களில் ஏதோ மேல்வாரியாக சில கூடுதல் நடவடிக்கை எடுத்திருப்பது கரோனாவைக் கட்டுப்படுத்த போதுமானது அல்ல. கரோனா பெரும்பாலும் மனிதர்களாலேயே பரப்பப்படுகிறது. மனித நடமாட்டத்தைத் தீவிரமாக ரத்து செய்தால் இதனை ஒடுக்குவது சாத்தியமே. இதைத்தான் தாராவியில் செய்து காட்டியுள்ளார்கள்.


முதல்வரே, நான் குறிப்பிட்டுள்ள இந்த 3 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 முதல் 10 அல்லது 15 தேதி வரை தாங்கள் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்:


* இந்த 3 மாவட்டங்களின் எல்லைகளை இறுக்கமாக மூடுங்கள்.


* வீட்டை விட்டு யார் வெளியில் வந்தாலும் (கரோனா தடுப்பு அதிகாரிகள், காவல்துறை, மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் அத்தியாவசிய சேவை புரிபவர்கள் தவிர) கடும் நடவடிக்கை எடுக்கவும்.


* வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இந்த ஊரடங்கு நாட்களுக்குத் தேவையான விலையற்ற உணவுப் பொருட்களை அவர்களின் வீட்டிற்கே அனுப்பவேண்டும். மேலும் அவர்களின் சில்லறை செலவிற்குக் குடும்பத்திற்கு ரூ.1,000 கொடுக்கவும்.


* 15 நாட்களுக்கு கரோனா எதிர்ப்புச் சக்திக்குத் தேவையான அனைத்து விலையற்ற மருந்துகள், அனைத்து வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்படவேண்டும்.


* அவசர சிகிச்சைக்கு இப்பகுதியில் நடமாடும் மருத்துவமனைகளும் சோதனைச் சாவடிகளும் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும்.

 

http://onelink.to/nknapp


* கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தினசரி பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.


* மேல்குறிப்பிட்டவைக்கு ஆகும் செலவு, இதுவரை கரோனா தடுப்பு திட்டத்திற்காக செலவு செய்யப்பட்டத்தில் மிக மிகக் குறைவானதாகவே இருக்கும்.


இவை அனைத்தையும் தீவிரமாகச் செயல்படுத்தினால் மக்கள் நடமாட்டம் இங்கு முழுவதுமாக முடக்கப்பட்டு கரோனா தொற்று பரவலைக் கனிசமாகக் கட்டுப்படுத்த முடியும்.


உலகிலேயே ஜனநெருக்கம் மிக அதிகமாக உள்ள தாராவியில் சாதிக்கும் போது நாமும் இதைச் சாதிக்கலாமே!

 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்