Skip to main content

சோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி. அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் அவரை சமாதானப் படுத்த முயற்சித்தனர் காங்கிரஸின் மூத்த தலைவர்கள். அதனை ஏற்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்தார் ராகுல். 


இதனையடுத்து சோனியாவிடம் பஞ்சாயத்துப் போனது. அவரும், " ராகுலின் முடிவில் தலையிட விரும்பவில்லை. நேரு குடும்பத்தை விட்டு வெளியிலிருந்து ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுங்கள்" என கறாராகத் தெரிவித்திவிட்டார். இந்த நிலையில் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மூன்று முறை நடந்தது. ஆனால், தலைவர் பொறுப்பை ஏற்க மூத்த தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.

  congress



அதேசமயம், ராகுலும் தனது முடிவில் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து , கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் தங்களின் கட்சி பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கை அதன் தோழமை கட்சிகளிடத்தில் குறைந்து வருகிறது. 


 

இந்தச்சூழலில், அண்மையில் சோனியா காந்தியை மீண்டும் சந்தித்த மூத்த தலைவர்கள், "கட்சியின் தலைவர் பதவிக்கு நீங்கள் மீண்டும் வர வேண்டும். இல்லையேல் உங்கள் கண் முன்னே கட்சி காணாமல் போகும். கட்சியை காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதனால் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல், தகுதியான ஒருவரை அடையாளப் படுத்துங்கள் " என கெஞ்சியுள்ளனர். சோனியாவும் யோசிக்கத் துவங்கியிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலில் போட்டியிடவில்லை” - காங்கிரஸ் வேட்பாளர் திடீர் முடிவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு தனது உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், வரும் மே 7ஆம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை கடந்த 12ஆம் தேதி அன்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹன் குப்தா, அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தது. 

Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

தேர்தல் தேதி நெருங்கும் இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரோஹன் குப்தா அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மோசமான உடல்நிலை காரணமாக, எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அகமதாபாத் கிழக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக நான், வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். கட்சியால் பரிந்துரைக்கப்படும் புதிய வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார். ரோஹன் குப்தா போட்டியிடுவதாக இருந்த அகமதாபாத் தொகுதியில் தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஹஸ்முக் பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தில் உள்ள  26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள்; கையெழுத்தான ஒப்பந்தம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Signed contract on Which constituencies for Congress

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த 9ஆம் தேதி ஆலோசனை நடத்தினர். சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினர். இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.

அதில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கையெழுத்தானது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, மதிமுக - 1 தொகுதி, விசிக - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் கையெழுத்தானது. அதில், கன்னியாகுமரி, திருவள்ளூர் (தனித்தொகுதி), கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக கையெழுத்து ஒப்பந்தமாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்று நிலையில், இந்த முறை அந்த மூன்று தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாங்கள் கேட்ட தொகுதிகளை வழங்கியுள்ளனர். எங்களுக்குச் சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம். 2 அல்லது 3 நாட்களில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.