Congress - BJP; How many blocks for whom? Rahul comments

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. பாஜகவிற்கு விருப்பமான எண் 40. எனவே, அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் 40 தொகுதிகளில்தான் வெற்றி கிட்டும். இது முடிவாகிவிட்டது. கர்நாடக மக்கள் 40 தொகுதிகளை மட்டும்தான் பாஜகவுக்குக் கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சி குறைந்தது 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

Advertisment

கர்நாடகத்தில் 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவை உறுதியாக நிரப்பப்படும். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கோடி நிதி வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். ஆட்சிக்கு வந்ததும் இதனை நடைமுறைப்படுத்துவோம். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும்” என்றும் கூறினார்.