Advertisment

காங்கிரஸ் உடனான கூட்டணி தொடருமா? டி.ஆர்.பாலு பதிலால் கூட்டணியில் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய குழுக்களின் தலைவர், துணை தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கனிசமான இடங்களை ஒதுக்காமல் புறக்கணித்து விட்டது திமுக. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் தொடங்கி முக்கிய நிர்வாகிகள் வரை கெஞ்சிப் பார்த்தும் பல மாவட்டங்களில் திமுக மா.செ.க்கள் இடம் தரவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி நொந்து போனது.

Advertisment

Congress alliance? - K S Alagiri Issue - T. R. Baalu - Interview

இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், கே.எஸ்.அழகிரியை தொடர்புகொண்டு, ‘’ கூட்டணிக்குள் என்ன பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் ? காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட தர முடியாது என திமுக அடம் பிடிக்கிறது. எங்களை கிள்ளுக்கீரையாக திமுக மா.செ.க்கள் பார்க்கிறார்கள் ‘’ என கொந்தளித்தனர். இதனையடுத்து, கே.எஸ். அழகிரியும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர்.ராமசாமியும் இணைந்து திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டறிக்கையை வாசித்தனர்.

அதில், நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடங்கத்திலிருந்தே எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மாவட்ட அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் படஹ்விகளில் 2 இடங்கள் மட்டுமே திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 1 மாவட்ட ஊராட்சி மாவட்ட பதவியோ வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் ‘’ என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கூட்டணி தர்மத்திற்குப் புறம்பானது என்கிற வார்த்தைகள் திமுக தலைமையை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அழகிரியின் அறிக்கை தங்களுக்கு ஏற்புடையதல்ல என்கிற ரீதியில், சோனியா காந்திக்கு தகவலை பாஸ் பண்ணியிருக்கிறது அறிவாலயம்.

இதற்கிடையே, தேசிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுகளுக்கு எதிராக சோனியா தலைமையில் ஒன்றிணையும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவின் போது ராகுல்காந்தி, மம்தா பானர்ஜியிடம் வலியுறுத்தியவரே ஸ்டாலின்தான். அப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் ஏற்பாட்டில் நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்ளாததன் பின்னணியில் நிறைய சந்தேகங்கள் உண்டு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Advertisment

இந்தநிலையில் டெல்லியில் சோனியாகாந்தியை கே.எஸ்.அழகிரி இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்பிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரசும் திமுகவும் இணைந்த கரங்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

அதேநேரத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுகவினர் கவலையில் இருந்தனர். கூட்டணி தர்மத்தை காக்கவில்லை என்று சொல்கிறார்கள். அது தவறான அறிக்கை. அந்த அறிக்கையை அவர் தவிர்த்திருக்கலாம் என்றார்.

காங்கிரஸ் உடனான கூட்டணி பழைய நிலைமைக்கு திரும்பியிருக்கிறதா? என்ற கேள்விக்கு, பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா இல்லையா என்பதை காலம் பதில் சொல்லப்போகிறது என்றார்.காலம் பதில் சொல்லும் என்ற டி.ஆர்.பாலுவின் பதிலால் கூட்டணி உள்ள கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்குமா இருக்காதா என்ற விவாதங்கள் நடந்து வருகிறது.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe