Advertisment

“தம்பிகள் இருவருக்கும் பாராட்டுகள்...” - கமல்ஹாசன் வாழ்த்து!

publive-image

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறி உள்ளது.

Advertisment

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை எடுத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகள் பெற்றிருந்ததும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியினர் கேட்ட'விவசாயி சின்னம்' கொடுக்காமல்'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

publive-image

அதேபோல் இரண்டு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று 2 சதவிகிதத்திற்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளதால் விசிக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கட்சி ஆரம்பித்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை. புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.

அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ntk seeman vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe