Advertisment

கூட்டணியில் விரிசல்; பாஜகவுக்கு தடைபோட்ட மேலிடம்!

Conflict between AIADMK and BJP

Advertisment

அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்த நிலையில், “கூட்டணி முறிந்தது. இது தான் அதிமுகவின் நிலைப்பாடு” என்று அதிகாரப்பூர்வமாக நேற்று (18/09/23) தெரிவித்தார் அதிமுகவின் சீனியர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார். கடந்த 14-ந்தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வது குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அமித்ஷா தரப்பில் வைக்கப்பட்ட இடப்பகிர்வு எண்ணிக்கையை எடப்பாடி மறுத்துள்ளார். இருப்பினும், “கட்சியின் உயர்மட்டக் குழுவில் விவாதிக்காமல் உங்களின் கோரிக்கையை ஏற்க இயலாத நிலையில் இருக்கிறேன். கலந்து பேசிவிட்டு தகவல் தருகிறேன்” என அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், இதில் உடன்பட மறுத்த அமித்ஷா, “பாஜகவின் எதிர்பார்ப்பு இது. அதனை நீங்கள் நிறைவேற்றுங்கள். உங்கள் சொல்லுக்கு கட்டுப்படாதவர்களாக அதிமுக நிர்வாகிகள்?” என கடுமைக் காட்டியுள்ளார். அப்போதும் அமைதியாகவே பேசிய எடப்பாடி, “அதிமுக-பாஜக கூட்டணியில் நீங்கள் தான் சீரியஸ் காட்டுகிறீர்கள். ஆனால், அண்ணாமலை காட்டவில்லை. கூட்டணியை முறிக்கும் வகையில் தான் அவரது சீக்ரெட் நடவடிக்கைகள் இருக்கிறது. தமிழக பாஜகவில் இருந்தே எனக்கு தகவல் கிடைக்கிறது. இப்படியிருப்பதால் அண்ணாமலை மீது அதிமுகவினர் வெறுப்பாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, உங்கள் கோரிக்கையை சொல்லி உயர்மட்டக்குழுவை எப்படி சம்மதிக்க வைக்க முடியும்?, அதனால், அண்ணாமலையை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். இல்லையெனில் அவரை மாற்றுங்கள். அண்ணாமலை இல்லாத பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவின் உயர்மட்டக்குழுவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.

14-ஆம் தேதி நடந்த சந்திப்பில் இப்படி விவாதம் நடக்க, தலைவர் பதவியில் இருந்து தன்னை மாற்றும்படி எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விசயத்தை தெரிந்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதுமாதிரி ஏதேனும் செய்ய வேண்டும் என திட்டமிட்ட அண்ணாமலை, மறுநாள் 15-ந்தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளின் போது, அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் தவறாக சில கருத்துக்களை பதிவு செய்தார். இது, அதிமுகவின் அனைத்து மட்டங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியும் கோபம் கொண்டார். உடனடியாக ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகத்தை தொடர்புகொண்டு, அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்வினையாற்றச் சொல்லி உத்தரவிட்டதாக அதிமுக வட்டாரம் தெரிவித்தது.

Advertisment

மேலும், அதன்படியே அண்ணாமலையை கடுமையாக கண்டித்தனர். இதனால் அதிமுக-பாஜக இரு தரப்பும் வார்த்தைகளில் மோதிக் கொள்ள, சீனியர்களுடன் விவாதித்தார் எடப்பாடி பழனிசாமி. இனியும் பொறுக்க வேண்டாம் என்ற நிலையில் தான், கூட்டணி இல்லை என அறிவிக்கச் சொல்லி ஜெயக்குமாருக்கு எடப்பாடி உத்தரவிட நேற்று(18/09/23) அண்ணாமலையையும், பாஜகவையும் கடுமையாக தாக்கிய ஜெயக்குமார், “பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ்; அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி இல்லை. எடப்பாடியின் உத்தரவின் பேரிலேயே சொல்கிறேன். அதிமுகவின் நிலைப்பாடு இதுதான்” என்று அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு, அதிமுகவினரிடம் உற்சாகத்தைக் கொடுக்க, தமிழக முழுவதும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர் அதிமுகவினர். அதேசமயம், ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்களான பாஜக நிர்வாகிகள் கடுமையாக எதிர்வினையாற்றினர். இதனால் இரு தரப்பினரும் ஊடகங்களில் கடுமையாக பரஸ்பரம் எதிர்த்து பேசிக்கொண்டனர். இதனால் அதிமுக-பாஜக வளாகங்களில் உறுமல் சத்தம் அதிகரித்தபடி இருந்தது.

இதையெல்லாம் கவனித்த ஒன்றிய அரசின் உளவுத்துறை, “தமிழக பாஜகவின் அரசியல் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது” என்று டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அதேபோல, தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் சிலர், “அண்ணாமலையின் தன்னிச்சையான அரசியலும், அவரது பேச்சும் பாஜகவுக்கு நன்மை செய்யவில்லை. அதிமுகவுடன் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிற ரீதியில் கட்சியின் தேசிய தலைமைக்கு புகார் தெரிவித்திருக்கிறார்களாம். இதனை ஆராய்ந்த கட்சியின் தேசிய தலைமை அண்ணாமலை மீது அதிருப்தியடைந்துள்ளது.

கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், அண்ணாமலையை தொடர்புகொண்டு கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் அப்செட் ஆன அண்ணாமலை, வீட்டிலேயே முடங்கி விட்டார். அண்ணாமலைக்கு டோஸ்விட்ட கையோடு, பாஜக மாநில நிர்வாகிகளுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் பி.எல்.சந்தோஷ். இதனையடுத்து, “பாஜக - அதிமுக கூட்டணி பாறை போல உறுதியாக உள்ளது” என்று திருப்பதி நாராயணன் பதிவு செய்துள்ளார். அதேபோல, கரு.நாகராஜனும், “கூட்டணியை பற்றி தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். அதனால், கூட்டணி குறித்து பாஜகவினர் யாரும் விமர்சிக்கக் கூடாது” என்று பாஜகவினருக்கு உத்தரவிடும் வகையில் பதிவு செய்துள்ளார். கூட்டணிப் பற்றி பேச தமிழக பாஜகவுக்கு டெல்லி மேலிடம் போட்டுள்ள இந்த தடை உத்தரவு தான் பாஜகவில் தற்போது ஹை-லைட்டாக பேசப்படுகிறது என்கின்றனர் விஷயம் அறிந்தோர்கள்.

admk Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe