Advertisment

எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

Condolence of Tamil Nadu Chief Minister MLA Pugazhendi passed away

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்

Advertisment

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த புகழேந்திக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார்.

நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார். 1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர்.

எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும். ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

condolence MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe