Skip to main content

9 லட்சம் மாணவர்களின் கவலை; ஆளுநரின் அறிவிப்பும் அமைச்சரின் பேட்டியும்!

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Concern of 9 lakh students; Governor's announcement and minister's interview!

 

நெல்லையில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. மேலும் சில பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. அதேபோல் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. மற்ற பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

 

ஜூன் 16 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 28 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 19 ஆம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஜூலை 7-ஆம் தேதி நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவப் பல்கலைக்கழகத்திற்கும் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருவார்கள். இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். ஆனால் ஆளுநருக்கு மத்திய அமைச்சரிடம் தேதி வாங்கி அவர்களை அழைத்து வந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அவர்கள் தேதி கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள். மத்திய அமைச்சர்கள் வந்தாலும் வரவில்லை என்றாலும் துணை வேந்தர்கள், தமிழக அமைச்சர்கள் என யாரையாவது அழைத்து நடத்துவதில் தவறு இருக்க முடியாது.

 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குத்தான் கொடுத்துள்ளார்கள். பட்டப் படிப்புக்கான சான்று கொடுக்கவில்லை என்றால் மணவர்களுக்கு பாதிப்பு தான். சர்வதேச அளவில் படிப்பை மேம்படுத்த வேண்டும். இங்கிருப்பவர்கள் வெளியில் செல்ல வேண்டும். வெளியில் இருப்பவர்கள் இங்கு வர வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவு இருக்கிறார்கள். வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் டிகிரி சான்றிதழ் தான் கேட்கிறார்கள். எனவே அதை கொடுக்காததினால் மாணவர்களுக்கு பாதிப்பு உருவாகிறது. இதில் எங்களை கேட்பது இல்லை. தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல் இல்லாமல் நடைபெறும் நிகழ்ச்சி இது.

 

இன்று மொத்தமாக 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 பேர் கல்வியில் தேர்ச்சி பெற்றுப் பட்டமளிப்பிற்காக காத்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் 2022 ஆம் ஆண்டு பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. மீதமுள்ள 12 பல்கலைக்கழகங்களில் 2022 ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.