ADVERTISEMENT

"உயிர் தியாகம் செய்யாமல், வாழ்ந்து போராடுவோம் என்ற முடிவுக்கு வாருங்கள்’’-வைகோ

09:28 PM Apr 12, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழகத்துக்கு துரோகம் இழைத்த பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து
ஈரோடு மாநகரில் இளைஞன் தர்மராஜ்தீக்குளித்து உயிர் நீத்த உன்னதத் தியாகம் என்று வைகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் மேலும் தனது அறிக்கையில், ‘’தமிழ்நாட்டின் உயிர் வாழ்வாதாரமான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் இழைத்த பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, ஈரோடு மாநகரில் தாய் தந்தை அற்றவரும், திருமணம் ஆகாதவருமான எந்த அரசியல் கட்சியையும் சாராத தர்மராஜ் என்ற இளைஞர் இன்று தீக்குளித்து உடல் எங்கும் கருகி, சிறிது நேரத்திலேயே உயிர் நீத்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னைத் தாக்கியது.

வாழ்க்கையின் வசந்தத்தைக் காண வேண்டிய வாலிப வயதில் தமிழகத்தை வாழ வைக்க தன்னையே நெருப்புத் தணலுக்குப் பலியிட்டு, உயிரை அர்ப்பணித்துக் கொண்டதை அறிந்து என் உள்ளம் வேதனையால் உடைந்தது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இந்த இளைஞன் பாட்டிகள் இருவரோடு வசித்து வந்தார். கோவில்களிலும், திருவிழாக்களிலும் சிறு சிறு பொம்மைகள் விற்கின்ற வணிகம் செய்து, வசதியற்ற வாழ்வுதான் நடத்தி வந்துள்ளார். காவிரி தீரத்தில் அவருக்கு நஞ்சை ஒன்றும் இல்லை. ஆனால், தன் உயிரைவிட தமிழக விவசாயிகளின் வாழ்வு, தமிழ்நாட்டின் எதிர்காலம் மேலானது என்று கருதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது, தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்ற வகையில் தமிழக இளைஞர்கள் தமிழகத்தின் உரிமைகளைக் காக்க உயிர்த் தியாகமும் செய்வார்கள் என்பதை உணர்த்துவதற்காக பற்றி எரியும் நெருப்புக்கு தன் உடலையும், உயிரையும் தந்துள்ளார்.

தமிழர்களைத் தலைநிமிர வைத்த பகுத்தறிவுப் பேரொளி அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் காவிரிக்காக தன்னை களபலி ஆக்கிக் கொண்டார் தர்மராஜ். இத்தகைய வீரமும், தியாக உணர்வும் கொண்ட இலட்சோப இலட்சம் இளைஞர்கள் தமிழகத்தில் உள்ளனர். இப்படி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்கின்ற செயலில் ஈடுபடாமல், வாழ்ந்து போராடுவோம் என்ற முடிவுக்கு வாருங்கள் என தமிழக இளைஞர்களை தந்தையாக, மூத்த அண்ணனாக இருகரம் கூப்பி மன்றாடி வேண்டிக்கொள்கிறேன்.

தியாகச் சுடர் தர்மராஜின் இறுதிச் சடங்குகள் நடந்தபோதே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி அந்த ஏழ்மையான குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் மூன்று இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

வீரத் தியாகி தர்மராஜின் துயர மரணத்தால் கண்ணீரில் தவிக்கும் அக்குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT