Advertisment

“அந்த சார் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” - முதல்வர் உறுதி

CM stalin spoke about Anna university issue at tamilnadu assembly session

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டதொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசியக் கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம்தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

Advertisment

அதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் 2வது நாள் அலுவல் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக, காங்கிரஸ், பா.ம.க வி.சி.க, சி.பி.ஐ, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் அப்பாவுவிடம் அளித்தது.

Advertisment

இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அலுவல் இன்று (08-01-25) தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதானவிவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது. கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் பேரவையில் ஒவ்வொருவரும் பேசி வந்தனர்.

இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், “சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பெயரைச் சொல்லை களங்கப்படுத்த விரும்பவில்லை. அதனால், சென்னையில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது என்பது மாபெரும் கொடூரம், அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். இதை பயன்படுத்தி இந்த ஆட்சி மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார். சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுப்பதே அரசின் நோக்கம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று நியாயம் பெற்றுத் தருவதே அரசின் நோக்கம்.

குற்றம் நடந்த பிறகு குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தாலோ, குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ இந்த அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரத்திற்குள்ளே குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்கானது தானே தவிர உண்மையான அக்கறையோடு செயல்படுவதில்லை. முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழக அரசு காரணமில்லை. ஒன்றிய அரசின் கீழ் செயல்படுகிற தேசிய தகவல் மையத்தினால் தான் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காரணம். அதை காவல்துறையாக உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு அதன் பிறகு தொழில்நுட்ப கோளாறும் சரிசெய்யப்பட்டது. அது தொடர்பாக அந்த அமைப்பும் கடிதமும், விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு யார் அந்த சார்? என்று கேட்கிறார்கள். உயர்நீதிமன்றம் உத்தரவுபடி சிறப்பு புலனாய்வுக் குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றவாளி இருக்கிறார்களா? என்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திர்கை தாக்கல் செய்யப்படும். யார் அந்த சார் என்று கேட்கும் எதிர்க்கட்சிகள், இந்த வழக்கில் ஏதேனும் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அதை கொடுங்கள். அதைவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட வழக்கில் வீண்விளம்பரத்திற்காக, குறுகிய அரசியல் லாபத்திற்காக மலிவான அரசியலை ஈடுபட வேண்டாம் என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். யார் அந்த சார் என்று விமர்சிக்கும் சிலர் மத்திய அரசிடம் உதவி கேட்டுக்கொள்ளுங்கள்.

இந்தியாவிலே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் 10 மாநகரங்களில், நமது கோவையும், சென்னையும் இருக்கிறது. பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. சென்னை மாணவி பாலியல் விவகாரம் மட்டுமல்லாது, எங்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று நினைத்து பாருங்கள். தொடர்ச்சியாக பல பெண்களுக்கு இரண்டு வருடமாக பாலியல் குற்றங்கள் நடந்திருக்கிறது. அன்றைய அதிமுக ஆட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐயிடம் அந்த வழக்கு சென்ற பிறகு தான் உண்மைகள் எல்லாம் வெளியே வந்தது. இது போல், 100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. பா.ஜ.கவின் நிலையை சொல்லி பேரவையில் மாண்பை குலைக்க விரும்பவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால், கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல; திமுக ஆதரவாளர் மட்டுமே. அவர் அமைச்சருடன் புகைப்படம் எடுத்திருக்கலாம்; ஆனால் அவர் திமுகவில் இல்லை, அனுதாபி மட்டுமே” என்று பேசினார். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் பேசியதை கண்டித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe