ADVERTISEMENT

“போராடும் விவசாயிகளை புரோக்கர் என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி” - முதல்வர்

10:53 AM Apr 11, 2024 | ArunPrakash

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாம்தான் எல்லாத் தொகுதியிலும் வெல்லப் போகிறோம் என்று தெரிந்து கொண்ட பழனிசாமி, இப்போது என்ன கேட்கிறார். மத்திய அரசில் 14 ஆண்டுகள் இருந்த தி.மு.க. என்ன சாதித்தது என்று கேட்கிறார். பலமுறை இதற்குப் பதில் சொல்லி இருக்கிறேன். முதலில் பழனிசாமி அவர்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களைப் படியுங்கள். பழனிசாமியால் எந்தச் சாதனையாவது சொல்ல முடியுமா? ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், அ.தி.மு.க. இரண்டே இரண்டு காரியங்களைத்தான் செய்யும். ஒன்று, தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தால், அதைக் கலைக்கச் சொல்லுவார்கள். இல்லை என்றால், தங்கள் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?

ADVERTISEMENT

தினமும் அமாவாசை எப்போது என்று காலண்டரில் பார்க்கும், அரசியல் அமாவாசையான பழனிசாமி என்ன உளறிக் கொண்டு இருக்கிறார். ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார், அதற்கு வழியில்லை என்று உளறிக் கொண்டு இருக்கிறார். பழனிசாமி அவர்களே… தி.மு.க. பிரதமர்களை உருவாக்கும் இயக்கம், குடியரசுத் தலைவர்களை உருவாக்கும் இயக்கம், ஒன்றியத்தில் ஜனநாயகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம், ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் வரலாறு!

நீங்கள் என்ன கனவில் இருந்தீர்கள்? ஒரே நாடு – ஒரே தேர்தல் என்று பா.ஜ.க. சொல்கிறது, நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்துவிடும் என்று ‘இலவு காத்த கிளி’ போன்று இருந்தார் பழனிசாமி. அவர் வதந்தி கிளப்பியது போன்று எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் இப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்களே, அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும். பார்த்துக் கொண்டே இருங்கள். உங்களிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே பறிக்கப் போகிறோம்.

அடுத்து என்ன பேசுகிறார்? அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று சவடால் விடுகிறார். அ.தி.மு.க.வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. அதுதான் நீங்களும், பன்னீர்செல்வமும், தினகரனும் அதை போட்டிப் போட்டு செய்து கொண்டு இருக்கிறீர்களே.

அதற்குப் பிறகு என்ன? அதில் சந்தேகம் வேண்டாம் விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி, ஸ்டாலினும், உதயநிதியும் பேசவில்லை என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார் பழனிசாமி. விவசாயிகள் உங்கள் ஆட்சியைப் போன்று, கஷ்டத்தில் இருந்தால்தானே, அவர்களின் கஷ்டங்களைப் பேசுவார்கள். திமுக ஆட்சியில் விவசாயிகள் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பழனிசாமிக்கு உண்மையிலேயே உழவர்கள்மேல் அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், இப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்காக ஏன் பழனிசாமி பேசவில்லை? அவர்களுக்காக ஏன் கண்ணீர் வடிக்கவில்லை? அதற்குக் காரணமான மோடியை ஏன் விமர்சிக்கவில்லை?

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் விவசாயிகள். அவர்கள் தெரிவித்த எதிர்ப்பினால்தான், பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. அப்போது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது ஒன்றிய அரசு. ஆனால், அதையும் கடந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. அவர்கள்மேல் இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி நாட்டு பயங்கரவாதிகள் போன்று, மோடி அரசு சொந்த நாட்டு உழவர்களை பழிவாங்கியபோது, இந்த பச்சைப்பொய் பழனிசாமி எங்குச் சென்றார் உழவர்களுக்கு எப்படிப்பட்ட துரோகத்தை செய்தார் இந்த பழனிசாமி? மூன்று வேளாண் சட்டங்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருப்பதாகச் சொல்கின்றவர்களுடன் நான் விவாதிக்கத் தயார். இந்தச் சட்டம் வந்தால் தமிழ்நாட்டு விவசாயிகள் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று வியாபாரம் செய்யலாம்” என்று கப்சா விட்டவர் பழனிசாமி. போராடிய விவசாயிகளை, அவர்கள் விவசாயிகளே இல்லை, புரோக்கர் என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி. அப்படிப்பட்டவர், இன்றைக்கு விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

பழனிசாமி அவர்களே… தி.மு.க. ஆட்சியில்தான், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறோம். மூன்றே ஆண்டுகளில் இரண்டு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கஜானாவைத் தூர்வாரினீர்கள். நாங்கள் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரிக் காவிரியைக் கடைமடைக்கும் கொண்டு சென்றோம். உணவு அமைச்சர் சக்கரபாணி இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் என்று நடத்தி, உழவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது. மக்களும் செழிக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

உழவர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் துரோகம் செய்தார் பழனிசாமி. இன்றைக்கு திண்டுக்கல்லில் சிறுபான்மை மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து இருக்கிறார். சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடிய பெண்கள், குழந்தைகள் மீது தடியடி நடத்தி ரசித்து, நான் உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் என்று எட்டாயிரம் பேர் மேல் எப்.ஐ.ஆர் போட்டாரே. குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்தபோது, பழனிச்சாமி என்ன செய்தார்? எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்? என்று ஆணவமாகக் கேட்டார், என்று கடுமையாக சாடினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT